Published : 15 Jun 2015 05:59 PM
Last Updated : 15 Jun 2015 05:59 PM

தொடரும் மே.இ.தீவுகளின் வேதனை: வென்றது ஆஸ்திரேலியா

ஜமைக்காவில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

முதல் இன்னிங்சில் டெய்லரின் அபார பந்து வீச்சிலும், ஸ்டீவ் ஸ்மித்தின் அற்புதமான 199 ரன்களால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 399 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 8 விக்கெட்டுகளை 143 ரன்களுக்கு இழந்து பாலோ ஆன் அபாயத்தில் இருந்த போது ஜேசன் ஹோல்டர் ஒரு கபில்தேவ் பாணி அதிரடியைக் காட்ட, 63 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 82 நாட் அவுட் என்று முடிய, மே.இ.தீவுகள் 220 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்த்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா தன் இரண்டாவது இன்னிங்சை 212/2 என்று டிக்ளேர் செய்து மே.இ.தீவுகளுக்கு 392 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதில் 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 16/2 என்று இருந்த அந்த அணி நேற்று 4ம் நாள் ஆட்டத்தில் 114 ரன்களுக்கு படுமோசமாக ஆட்டமிழந்து படுதோல்வி சந்தித்தது.

ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஹேசில்வுட், ஜான்சன், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாட்சன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

3-ம் நாள் முடிவில் கிரெய்க் பிராத்வெய்ட், ரஜிந்திர சந்திரிக்கா ஆகியோரை முதல் ஓவரிலேயே ஸ்டார்க் வீழ்த்த, நேற்று 4ம் நாள் ஷேன் டோவ் ரிச்சுக்கு அற்புதமான பந்து ஒன்றை வீச அவர் பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை.

ஸ்டார்க் 6 ஒவர் 4 மெய்டன் 2 ரன்கள் 3 விக்கெட்.

ஹேசில்வுட் அருமையான ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஸ்விங் செய்து தொடர்ந்து அச்சுறுத்தலாக திகழ்ந்தார், இப்படியாகவே அவர் டேரன் பிராவோவை எட்ஜ் செய்ய வைத்து வீழ்த்தினார். பிளாக்வுட்டுக்கு மாறுதலாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர பிளேய்ட் ஆன் ஆனார் அவர். மே.இ.தீவுகள் 33/5.

ஷாய் ஹோப், தினேஷ் ராம்தின் கொஞ்ச நேரம் இழுத்தடித்தனர். ஆனால் ஜான்சன், ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை உள்ளே கொண்டு வர ஹோப்பின் ‘ஹோப்’ சரிவடைந்து ஆஃப் ஸ்டம்ப் தொந்தரவுக்குள்ளானது. முதல் இன்னிங்ஸில் தனிநபராக ஆடிய ‘கபில்’ ஹோல்டர் இந்த முறை சோர்வுடன் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வாட்சனிடம் அவுட் ஆனார்.

உணவு இடைவேளையின் போது வேதனையான 72/7 என்று இருந்த மே.இ.தீவுகள் உணவு இடைவேளைக்குப் பிறகு ராம்தின் (29) தடுப்பு உத்தி எந்த வித பயனையும் அளிக்காமல் 114 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட நாயகனாக ஸ்மித்தும் தொடர் நாயகனாக ஹேசில்வுட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய மேற்கிந்திய அணியைக் கட்டமைக்க முயலும் கிளைவ் லாய்ட் மற்றும் பயிற்சியாளர் சிம்மன்ஸ், முதலில் பயனற்ற தினேஷ் ராம்தின்னை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும், கிறிஸ் கெய்லிடம் பேசி இன்னும் சிறிது காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் செய்ய வேண்டும். ஓய்வறையில் இளம் வீரர்கள் பார்த்து உற்சாகமடைவதற்கான ஒரு வீரர் கூட இல்லாமல் அணி எப்படி முன்னேறும்? சிந்திக்குமா மே.இ.தீவுகள் வாரியம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x