

பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த சாய்னா நெவால், இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் காலிறுதியில் சீன வீராங்கனை வாங் ஷிக்ஸியானிடம் போராடித் தோல்வி தழுவினார்.
21-16, 12-21, 18-21 ஆகிய செட்களில் சாய்னா நெவால், சீனாவின் வாங் ஷிக்ஸியானிடம் காலிறுதியில் போராடி தோல்வி தழுவினார்.
2009, 2010, 2012 ஆகிய இந்தோனேசிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா இம்முறையும் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல் கேமில் ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா 37-ல் 21 புள்ளிகளைப் பெற்று முதல் செட்டை 21-16 என்று கைப்பற்றினார்.
ஆனால், ஷிக்ஸியான் எப்போதும் மீண்டு எழக்கூடிய ஒரு வீராங்கனை. 2-வது செட்டில் அவரது ஆட்டம் எழுச்சி பெற்றது. தொடர்ச்சியாக 6 புள்ளிகளை பெற்று 21-12 என்று 2-வது செட்டைக் கைப்பற்றினார், இதனால் ஆட்டம் 3-வது செட்டிற்கு நகர்ந்தது.
3-வது செட்டில் ஒரு சயமத்தில் சாய்னா 13-8 என்று நல்ல முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக 5 பாயிண்ட்களை வென்று ஷிக்ஸியான் சமன் செய்து அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை 21-18 என்று கடைசி செட்டைக் கைப்பற்றி 2-1 என்று சாய்னாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.