Last Updated : 25 May, 2014 11:33 AM

 

Published : 25 May 2014 11:33 AM
Last Updated : 25 May 2014 11:33 AM

ஜான், கௌரி கலக்கல்; முதலிடத்தில் இந்தியன் வங்கி: 4-0 என்ற கோல் கணக்கில் போலீஸை தோற்கடித்தது

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை தோற்கடித்தது. அந்த அணியின் ஸ்டிரைக்கர்கள் ஜான், கௌரிதாசன் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது இந்தியன் வங்கி.

சென்னை நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணியான இந்தியன் வங்கி ஆரம்பத்திலேயே ஆட்டத்தை தன்வசம் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் இந்தியன் வங்கியின் வலது பின்கள வீரர் ஜாஸ்கானிடம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்த ஜானுக்கு ‘பாஸ்’ செய்தார்.

அதை வாங்கிய ஜான், சற்று தூரம் பந்தை முன்னோக்கி கடத்திச் சென்று கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அதை போலீஸ் கோல் கீப்பர் மனோஜ் தகர்க்க முயற்சித்தபோது, அவருடைய கையில் பட்ட பந்து, நழுவிச் சென்று கோல் கம்பத்தின் மீது மோதி மீண்டும் கோல் வலைக்குள் விழ, இந்தியன் வங்கிக்கு முதல் கோல் கிடைத்தது. அடுத்த 2-வது நிமிடத்தில் (18-வது நிமிடம்) இந்தியன் வங்கியின் மற்றொரு ஸ்டிரைக்கர் கௌரிதாசன் கோலடித்தார்.

42-வது நிமிடத்தில் இந்தியன் வங்கியின் மிட்பீல்டர் எட்வின் கொடுத்த நல்ல ‘கிராஸை’ ஜான் வெளியில் அடித்து வீணடித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்தியன் வங்கி, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே (46-வது நிமிடம்) 3-வது கோலை அடித்தது. வலதுபுறத்தில் இருந்து கௌரிதாசன் கொடுத்த ‘கிராஸில்’ ஜான் இந்த கோலை அடித்தார்.

இதன்பிறகு இந்தியன் வங்கியின் ஜான், மிட்பீல்டர் மிஜோ ஆகியோர் ஏற்படுத்திக் கொடுத்த நல்ல கோல் வாய்ப்பை முறையே மிஜோ மற்றும் சதீஷ் குமார் வீணடித்தனர். 65-வது நிமிடத்தில் ஜான் கொடுத்த ‘பாஸில்’ கௌரிதாசன் தனது 2-வது கோலை அடித்தார். இந்த கோலை போலீஸ் கோல் கீப்பர் மனோஜ் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் பந்து வெளியில் செல்கிறது என்று நினைத்து தடுக்காமல் விட்டுவிட்டார். இறுதியில் இந்தியன் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்தியன் வங்கியின் ஜான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு போலீஸ் அணி முன்களம், மிட்பீல்டு, பின்களம் என எல்லா துறைகளிலும் செயலிழந்ததால் படுதோல்வி தவிர்க்க முடியாததானது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 5-வது தோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக்கில் ஸ்டார் ஜுவனைல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியைத் தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்கள்:

முதல் டிவிசன்

மெட்ராஸ் யூத் பெஸ்டிவல்-எஸ்பிஐ

நேரம்: பிற்பகல் 2.15

சீனியர் டிவிசன்

ஏரோஸ் எப்சி-ஐசிஎப்

நேரம்: மாலை 4.15

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x