

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 7-வது அகில இந்திய ஹாக்கி போட்டி மே 21-ம் தேதி தொடங்கியது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணியும், ஜலந்தர் பி.எஸ்.எப். அணியும் மோதின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் 6-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சென்னை வருமான வரித்துறை அணிக்கு 3-வது இடமும், போபால் எம்.பி.எச்.ஏ. அணிக்கு 4-வது இடமும் கிடைத்தன.
பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் ஒலிம்பிக் வீரர் பல்வீந்தர்சிங் ஷம்மி பரிசுகளை வழங்கினார். முதல் பரிசு பெற்ற பெங்களூரு கனரா வங்கி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.1 லட்சம், 2-ம் இடம் பிடித்த ஜலந்தர் பி.எஸ்.எப். அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது.