

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவது குறித்து இப்போது யோசிக்கவில்லை. இப்போது எனது கவனம் எல்லாம் ஐபிஎல் போட்டியில்தான் உள்ளது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கம்பீர், கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ஐபிஎல் போட்டிக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியில் நான் மீண்டும் இடம் பிடிப்பதற்கு இந்த ஐபிஎல் போட்டி உதவும், இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்று கம்பீர் கூறியிருந்தார்.
2013-ம் ஆண்டு ஜனவரில் அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடாதது மட்டுமின்றி கேப்டன் தோனியுடனான கருத்து மோதலும் கம்பீர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாததற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்கும், எனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக ஐபிஎல் போட்டியை பார்க்கவில்லை. இது மிகவும் சிறப்பானதொரு போட்டி. மகிழ்ச்சியுடன் விளையாடி, அணிக்கு எனது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஐபிஎல்-லின் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கி வருகிறேன்.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் கொண்டு இப்போது விளையாடவில்லை. இப்போது எனது கவனமெல்லாம் ஐபிஎல் போட்டியில் மட்டுமே உள்ளது. போட்டிகளில் எனது செயல்பாடு திருப்திகரமாக இருந்தால் இந்திய அணித் தேர்வாளர்கள் நிச்சயமாக எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் விளையாடி விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. கடந்த சில ஆட்டங்களில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறேன்.
இதேபோன்று தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது இப்போதைய நோக்கம் என்றார் கம்பீர்.