உணவு இடைவேளை: டிக்ளேர் செய்தது இந்தியா; வங்கதேசம் 111/3

உணவு இடைவேளை: டிக்ளேர் செய்தது இந்தியா; வங்கதேசம் 111/3
Updated on
2 min read

பாதுல்லாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 462/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்ய, வங்கதேச அணி 4-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

வழக்கமான உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்கள் முன்னதாக மீண்டும் வானிலை மோசமாக உணவு இடைவேளை அறிவிக்கப்பட்ட நிலையில் இம்ருல் கயேஸ் 59 ரன்களுடனும், ஷாகிப் அல் ஹசன் ரன் எடுக்காமலும் கிரீஸில் உள்ளனர்.

3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு புதிய பந்தில் அஸ்வின் தொடங்கிய விசித்திர கேப்டன்சி:

இன்று காலை வங்கதேசம் களமிறங்கும் என்று எதிர்பார்த்தபடியே நடந்தது. தமிம் இக்பால், இம்ருல் கயேஸ் களமிறங்கினர்.

சரி. வருண் ஆரோன், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மாவிம் புதிய பந்து வேகத்தை பார்க்கலாம் என்று பார்த்தால், முதல் ஓவர் இசாந்த், 2-வது ஓவர் அஸ்வின்.

இசாந்த் தன்னம்பிக்கையுடன் வீசவில்லை. 2 பந்துகள் கழித்து 3-வது பந்தே ரவுண்ட் த விக்கெட் பித்தத்துக்குச் சென்றார். ஆஸ்திரேலியாவில் இதே முறையை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடைபிடித்த போது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இடது கை பேட்ஸ்மென்களுக்காக இன்னொரு ஆஃப் ஸ்பின்னரை அணியில் எடுத்திருக்கும் தர்க்கத்துக்கு முரணாக வேகப்பந்து வீச்சாளர்கள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினால் என்ன பயன்? ஆனால் யார் என்ன கூறினார்களோ தெரியவில்லை உடனடியாக ஓவர் த விக்கெட்டுக்கு வந்தார் இசாந்த் சர்மா, நன்றாகவே வீசினார், ஆனால் வேகம் இல்லை. ஐபிஎல்-ல் வீசும் வேகம் இதில் ஏனோ வரவில்லை.

இம்ருல் கயேஸ் விரைவு அரைசதம் எடுத்தார், தமிம் இக்பால், ஹபிபுல் பஷார் டெஸ்ட் சாதனையை கடந்தார். வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரரானார் தமிம் இக்பால்.

அஸ்வினை மேலேறி வந்து பவுண்டரி அடித்தார் தமிம் இக்பால், ஆனால் அஸ்வினும் பந்தை திருப்பினார், நல்ல பிளைட், நல்ல இடத்தில் பந்தை பிட்ச் செய்தல் என்று நன்றாக வீசினார் அஸ்வின். இந்நிலையில் 19 ரன்களை 21 பந்துகளில் எடுத்த தமிம் இக்பால், அஸ்வின் பந்து ஒன்று நன்றாகத் திரும்ப டிரைவ் ஆட முயன்ற போது பந்து கடந்து சென்றது, சஹா பெய்ல்களை அகற்றினார், முதல் ஸ்டம்பிங், தமிம் ஆட்டமிழந்தார். கோலியின் முடிவிற்கு பலன்.

27/1 என்ற நிலையில் டிவில்லியர்ஸ் 12 அரைசத சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொமினுல் ஹக், இம்ருல் கயேஸுடன் சேர்ந்தார்.

உமேஷ் யாதவ் அற்புதமாக வீசியது அவரது பந்து வீச்சு அனாலிசிஸை பார்த்தால் புரியாது, நிறைய எட்ஜ்கள் பவுண்டரிக்குச் சென்றது. ஹர்பஜனுக்கு ரிதம் கிடைக்கவில்லை, கடைசியில் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அவர் ரிதமுக்கு வந்தார்.

28-வது ஓவரில் வங்கதேசம் 108/1 என்று இருந்தது, 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த மொமினுல் ஹக், ஹர்பஜன் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார், ஹர்பஜன் பந்தை சற்று முன்னால் இறக்க ஷாட் சரியாகச் சிக்கவில்லை, உமேஷ் யாதவ் கேட்ச் பிடித்தார்.

சரியாக ஒரு ஓவர் கழித்து முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்களில் ஆட்ட மிழந்தார். அஸ்வின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்ப் லைனில் நன்றாகத் திரும்ப மட்டையின் உள்விளிம்பு, கால்காப்பு ஆகியவற்றில் பட்டு ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. அருமையான பந்து. கிளாசிக் ஆஃப் ஸ்பின்னர் விக்கெட் இது. உணவு இடைவேளை அறிவிக்கப்பட தற்போது
மழை பெய்து கொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in