

ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமாக விளையாடி வருகிறேன். 2008-2011 காலக்கட்டங்களில் அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். உலக அரங்கில் ஒப்பிட்டால் கூட நான் டாப் 3 பவுலர்களில் ஒருவராகவே இருந்து வருகிறேன்.
ஆனாலும் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யாரும் என்னிடமும் எதையும் கூறுவதும் இல்லை. சாலஞ்சர் தொடராக இருந்தாலும் தியோதர் டிராபி கிரிக்கெட் தொடராக இருந்தாலும் நான் சில நடப்பு பவுலர்களுக்கு நிகராகவே வீசுகிறேன், சமயத்தில் அவர்களை விடவும் சிறப்பாகவே வீசுகிறேன்.
20-25 பவுலர்களை முயற்சி செய்து பார்த்து விட்டனர், ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா அதில் இல்லை. நான் எங்கு தவறாக முடிந்தேன் என்று தெரியவில்லை...
...இந்திய கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் சில கடினமான ஓவர்களை வீசியுள்ளேன். ஆனாலும் உறங்கச் செல்லும் போது இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதே என்னை வருத்தமுறச் செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியுடன் நான் செல்வேன் என்று பலரும் கூறினர். ஆனால் 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் கூட நான் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகும் கூட 10 நாட்களில் மக்கள் என்னை மறந்து விடுகின்றனர்.
2009, 2010, 2011-இல் வீசிய அதே ஆஷிஷ் நெஹ்ராதான் நான். இன்றும் எனது பந்துவீச்சில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக சென்னை என்ற நல்ல அணி எனக்குக் கிடைத்தது. இது வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டையும் இழந்து விட்டேன். நான் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். என்னை போன்ற ஒரு பவுலருக்கு 25 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு வந்திருக்க கூடாது. 2008-09-இல் தோனியும் அப்போதைய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனும் என்னை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பினர். அப்போது நான் ஆமோதிக்காமல் விட்டதை நினைத்து வருந்துகிறேன், அப்போது எனக்கு 30-வயதுதான். நான் இன்னும் கொஞ்சம் கடின உழைப்பை செலுத்தியிருக்க வேண்டும்.
இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு நான் நல்ல முறையில் செயல்படுவதாகவே கருதுகிறேன். நான் இன்னமும் நல்ல முறையிலேயே வீசிவருகிறேன். இது ஒரு சிந்தனை அளவில் உள்ள விஷயம், ஏதோ ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதற்காக நானும் தேர்வு செய்யப்படவேண்டும் என்று நான் கூறவில்லை. திறமைக்கு வயது ஒரு காரணமாக அமைய முடியாது” இவ்வாறு கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.