

சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது.
"ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன்.
பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. ஆனால், எங்கள் காலத்தில் சிறப்பாக பங்களிப்பு செய்த மொகீந்தர் அமர்நாத் போன்ற வீரர்களுக்கு இத்தகைய பொறுப்புகளை வழங்க பிசிசிஐ ஏன் மறந்து விட்டது? இத்தகைய மூத்த வீரர்கள்தான் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்த வீர்ரர்களின் பங்களிப்புக்காகவும் ஊக்கசக்தியாக இருந்துள்ளனர். இதுதான் எனது ஒரே கேள்வி.
நான் கேப்டனாக இருந்த போதுதான் அனில் கும்ளே அறிமுகமானார் (கர்நாடகா அணியில்), கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க இயக்குநராக நான் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ஆனால் பெங்களூரில் எனக்கு அருகில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனக்கு ஒரு பணியைக் கூட கொடுக்கவில்லை என்பது என்னைக் காயப்படுத்துகிறது.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு என்னால் முடிந்த சேவையாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார் கிர்மானி.
முன்னாள் வீரர்கள் பிரசன்னா, கிரண் மோர், வெங்கடபதி ராஜு, பிஷன் சிங் பேடி ஆகியோர் பிசிசிஐ-யின் இந்த முடிவை பெரிதும் வரவேற்றனர்.
இளம் வீரர்களுக்கு சச்சின், சவுரவ், லஷ்மண் நிறைய உத்வேகம் அளிப்பார்கள் எனவே இது ஒரு சிறந்த முடிவு என்று இவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.