பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 7 விக்கெட்டுகளில் இலங்கை வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 7 விக்கெட்டுகளில் இலங்கை வெற்றி

Published on

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங் ஸில் 42.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 42 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தரின்டு கவுஷல் 5 விக்கெட்டுகளையும், தமிகா பிரசாத் 3 விக்கெடுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 121.3 ஓவர்களில் 315 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜே.கே.சில்வா 80 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 77 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாளில் 118.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அசார் அலி 117 ரன்களும், அஹமது ஷெஸாத் 69 ரன்களும், யூனிஸ்கான் 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தமிகா பிரசாத் 4 விக்கெட்டுகளையும், சமீரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை வெற்றி

5-வது நாளான நேற்று 153 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இலங்கை பேட் செய்தது. ஈரப்பதம் காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம், மழையால் பாதிக்கப்படலாம் என்பதால் கருணாரத்னே-விதாஞ்சே ஜோடி முன்னெச்சரிக்கையோடு ஆடியது. அதிரடியாக ஆடிய அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தது. 23 பந்துகளைச் சந்தித்த விதாஞ்சே 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த சங்ககாரா முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.

இதையடுத்து கேப்டன் மேத்யூஸ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கருணாரத்னே 57 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு மேத்யூஸுடன் இணைந்தார் திரிமானி. இந்த ஜோடி சிறப்பாக ஆட, 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இலங்கை. மேத்யூஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், திரிமானி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி னார். இலங்கையின் தமிகா பிரசாத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. 3-வது போட்டி வரும் 3-ம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.

போட்டித் துளிகள்…

92 - கடந்த 20 ஆண்டுகளில் சாரா ஓவல் மைதானத்தில் விளையாடப்பட்ட 92 சதவீத டெஸ்ட் போட்டிகளில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது 12 போட்டிகளில் 11-ல் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் அதிக போட்டிகளில் முடிவு எட்டப் பட்ட மைதானம் என்ற பெருமை யைப் பெற்றுள்ளது சாரா ஓவல்.

5.77 - 4-வது இன்னிங்ஸில் இலங்கையின் ரன் ரேட் 5.77 சதவீதமாகும். இதுதான் 4-வது இன்னிங்ஸில் (25 ஓவர்களில்) அந்த அணியின் சிறந்த ரன் ரேட். இது டெஸ்ட் வரலாற்றில் 4-வது சிறந்த ரன் ரேட் ஆகும்.

6 - இலங்கை வீரர் குமார் சங்ககாரா 6-வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். இதன்மூலம் இலங்கையின் முன்னணி பேட்ஸ்மேன்களில் (1-7) அதிகமுறை கோல்டன் டக் அவுட் ஆனவர் என்ற சா(சோ)தனையை முன்னாள் வீரர் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்து கொண்டார்.

5 - கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிரசாத் ஆவார். இதற்கு முன்னர் 2010-ல் இதே மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லசித் மலிங்கா ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

50 - சொந்த மண்ணில் 50-வது டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இலங்கை. டாப்-8 டெஸ்ட் அணிகளில் நியூஸிலாந்தைத் தவிர எல்லா அணிகளுமே சொந்த மண்ணில் 50 வெற்றிகளைப் பெற்றுவிட்டன. நியூஸிலாந்து இதுவரை 49 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in