

ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் கடைசி ஆட்டத்தில் தன் அதிரடி சதத்தினால் சென்னையை வெளியேற்றிய சேவாக், தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் கூறியுள்ளார்.
"அன்றொரு நாள் தொலைபேசியில் என் மகன் என்னுடன் பேசியபோது, அப்பா ஏன் அவுட் ஆகிவிடுகிறீர்கள்? பள்ளியில் என் நண்பர்கள் உன் அப்பா ரன்களே அடிப்பதில்லை என்று என்னைக் கேலி செய்கிறார்கள் என்றான். நான் அவனிடம் இன்னும் போட்டிகள் உள்ளன நிச்சயம் ரன்கள் அடிப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன்." என்ற விவரத்தை வெளியிட்டார் சேவாக்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக சதம் எடுத்த சேவாக் நேற்று 8 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் 58 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து தனது பழைய அதிரடி பாணியை மீண்டும் வெளிப்படுத்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக சில பயனுள்ள இன்னிங்ஸ்களை சேவாக் ஆடினாலும் தனி நபராக ஒரு போட்டியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யும் இன்னிங்ஸை நேற்றைய இன்னிங்ஸிற்கு முன் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.