பார்ட்னர்ஷிப்பில் சதமடித்த பயஸ்

பார்ட்னர்ஷிப்பில் சதமடித்த பயஸ்
Updated on
1 min read

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் ஏகோன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸுடன் இணைந்து களமிறங்கினார். இதன்மூலம் இரட்டையர் பிரிவில் 100 வெவ்வேறு வீரர்களுடன் விளையாடியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பயஸ்.

டென்னிஸ் வரலாற்றில் 100 வெவ்வேறு வீரர்களுடன் விளையாடிய 47--வது வீரர் பயஸ் ஆவார். பயஸுடன் இணைந்து விளையாடிய 100 பேரில் 71 பேர் டூர் லெவல் போட்டியிலும், 29 பேர் சேலஞ்சர் லெவல் போட்டியிலும் விளையாடியவர்கள் ஆவர்.

இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான பயஸ், டென்னிஸ் போட்டியில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் மட்டும் 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் மூன்று பட்டங்கள் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான மகேஷ் பூபதியுடன் இணைந்து வென்றதாகும்.

இதுதவிர ரடேக் ஸ்டெபானெக், லூகாஸ் துலோகி ஆகியோருடன் இணைந்து தலா இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், மார்ட்டின் டாமுடன் இணைந்து ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர்கள் அனைவருமே செக்.குடியரசைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பயஸ் தனது 25 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் 700--க்கும் மேற்பட்ட வெற்றிகளை குவித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் முதல் சுற்றில் வெற்றி கண்டபோது, 700 போட்டிகளில் வென்ற 8--வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 50--க்கும் மேற்பட்ட போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in