Published : 06 Jun 2015 04:50 PM
Last Updated : 06 Jun 2015 04:50 PM

சாமுயெல்ஸ், டவ்ரிச் அபார ஆட்டத்துக்குப் பிறகு பெரும் சரிவு: ஆஸ்திரேலியா வெற்றி

டொமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 3 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியை வென்றது.

வெற்றி பெறத் தேவையான 47 ரன்களை 5 ஓவர்களில் அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சொதப்பி ஆல் அவுட்டான மேற்கிந்திய தீவுகள், அதன் பிறகு தேவேந்திர பிஷூவின் அச்சுறுத்தல் லெக் ஸ்பின் பந்துவீச்சின் காரணமாக ஆஸ்திரேலியாவை 127/6 என்று நெருக்கியது, ஆனால் அதன் பிறகு பிடியை நழுவவிட்டு, கேட்ச்களையும் நழுவ விட்டு ஆடம் வோஜசை ‘அறுவை’ சதம் காண வைத்ததோடு, கடைசி விக்கெட்டுக்காக ஹேசில்வுட், வோஜஸ் 97 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து 170 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 2-ம் நாளான நேற்று முன் தினம் 25/2 என்ற நிலையில் 3-ம் நாளான நேற்று களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி வந்தவுடன் 5 ரன்னில் டேரன் பிராவோ விக்கெட்டை இழந்தது.

ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வார்னரிடம் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார் டேரன் பிராவோ. 37/3 என்ற நிலையில் சாமுயெல்ஸ், அறிமுக வீரர் டவ்ரிச் இணைந்தனர்.

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய சாமுயெல்ஸ்-டவ்ரிச் ஜோடி

சாமுயெல்ஸ், டவ்ரிச் ஜோடி அணியின் பிளவுகளிலிருந்து எழுந்தனர். ஓரளவுக்கு பந்துவீச்சை நிதானமாக ஆடி, அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து உணவு இடைவேளையின் போது ஸ்கோரை 97/3 என்று உயர்த்தினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சை இன்னும் சவுகரியமாக ஆடத் தொடங்கினர். நேதன் லயன் ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார் சாமுயெல்ஸ்.

டவ்ரிச்சும் லயன் பந்தில் மிட் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து பிறகு மிட்செல் ஜான்சன் பந்தை புல்ஷாட் ஆடிஅரைசதம் பூர்த்தி செய்தார். ஆனால் அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 153. ஒரு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது.

இதனையடுத்து 170 ரன்கள் என்ற முன்னிலையைக் கடந்தது மே.இ.தீவுகள். டவ்ரிச் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை கிளார்க்குக்கு பிடித்த பீல்டிங் நிலையான ஷார்ட் மிட் ஆனில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதாவது 37/3 என்ற நிலையிலிருந்து கிளார்க் கொடுத்த பல சவால்களையும் கடந்து வந்து 4-வது விக்கெட்டுக்காக 144 ரன்களைச் சேர்த்த நிலையில் மேலும் முன்னிலையை நகர்த்திச் சென்றிருக்க வேண்டிய சூழலில் டவ்ரிச் அவுட் ஆனார்.

கடைசி 6 விக்கெட்டுகள் 35 ரன்களில்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணி தனது எதிர்மறை ஃபார்முக்கு திரும்பியது. ஜெர்மைன் பிளாக்வுட் தேவையில்லாமல் லயன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று தாழ்வான புல்டாசை ஆட முடியாமல் ஸ்டம்ப்டு ஆனார்.

சாமுயெல்ஸுக்கு ஆதரவு தேவை என்ற நிலையில் 74 ரன்களில் அவர் ஜான்சனின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடி பைன்லெக் திசையில் ஹேசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் தினேஷ் ராம்தின் லயன் பந்தில் பவுல்டு ஆனார். ஜெரோம் டெய்லர் ஸ்டார்க்கின் அபாய இன்ஸ்விங்கருக்கு முதல் பந்திலேயே எல்.பி.ஆனார். பிறகு தேவேந்திர பிஷூ, மற்றும் கேப்ரியல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டார்க் காலி செய்தார். ஜேசன் ஹோல்டர் 12 ரன்களில் ஒருமுனையில் தேங்கிப் போனார். 67-வது ஓவரில் 181/3 என்று இருந்த மேற்கிந்திய அணி அடுத்த 6 விக்கெட்டுகளை 19.3 ஓவர்களில் இழந்து வெறும் 35 ரன்களையே எடுத்தது.

ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஜான்சன், ஹேசில்வுட், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வெற்றி பெற 47 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் வார்னர் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் விளாசி டெய்லரிடம் இந்த டெஸ்டில் 2-வது முறையாக ஆட்டமிழந்தார். மார்ஷ் 13 ரன்களுடனும், ஸ்மித் 5 ரன்களுடனும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக ஆடம் வோஜஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x