

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் 6-3, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார். மான்பில்ஸுடன் இதுவரை 13 முறை மோதியிருக்கும் ஃபெடரர், 9-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பிரெஞ்சு ஓபனில் 11-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரர், அடுத்ததாக சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கவுள்ளார். ஃபெடரரும், வாவ்ரிங்காவும் இதுவரை 18 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 16 முறை வென் றுள்ளார்.
மற்றொரு ஆடவர் 4-வது சுற்றில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் 40-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெரர்.
முர்ரே வெற்றி
காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை சந்திக்கிறார் டேவிட் ஃபெரர். போட்டித் தரவரிசை யில் 3-வது இடத்தில் இருக்கும் முர்ரே, தனது 4-வது சுற்றில் 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை தோற்கடித்தார்.
ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
மகளிர் ஒற்றையர் 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-7 (3), 4-6 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் சஃபரோவா முதல்முறையாக பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
தோல்வி குறித்துப் பேசிய ஷரபோவா, “ஆரம்பத்தில் நன்றாக ஆடியபோதும், அதன்பிறகு அதேபோன்ற ஆட்டத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. சஃபரோவா தொடர்ச்சியாக ஆக்ரோஷமாக ஆடியதோடு, நல்ல வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டார். அதுதான் போட்டியின் முடிவை மாற்றியது. இன்றைய தினம் எனக்கு கடினமான தினம்” என்றார்.
சஃபரோவா தனது காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார். கார்பைன் தனது 4-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவை தோற்கடித்தார்.