

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் மற்ற இந்தியர்கள் அனைவரும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
கனடாவின் கல்கேரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி 21-19, 21-13 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் சன் காகா-யூன் சின் ஜோடியைத் தோற்கடித்தது.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜுவாலா-அஸ்வினி ஜோடி தங்களின் அரையிறுதியில் ஜப்பானின் ஷிஹோ டனாக்கா-கோஹாரு யோனேமோட்டோ ஜோடியை சந்திக்கிறது.
ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 13-21, 21-18, 11-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ சாங் வெய்யிடம் தோல்வி கண்டார்.
கடந்த இரு வாரங்களில் 2-வது முறையாக லீ சாங்கிடம் தோற்றுள்ளார் பிரணீத். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் தனது காலிறுதியில் 16-21, 15-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரிடம் தோல்வி கண்டார்.