

லலித் மோடியால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் தொடர்ந்து விளையாட எந்தத் தடையும் இல்லை என பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஆகிய 3 பேரும் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், சூதாட்டத் தரகருமான பாபா திவானிடம் இருந்து தலா ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதாக ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி ஐசிசியிடம் புகார் அளித்துள்ளார். அதை ஐசிசியும் உறுதி செய்துள்ளது.
அது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குரிடம் கேள்வியெழுப்பியபோது, அவர் கூறியதாவது:
அந்த கடிதத்தில் அப்படி எதுவும் இல்லை. லலித் மோடி ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளது ஐசிசி. லலித் மோடி புகார் கூறியுள்ள 3 பேரும் சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள். அதனால் அவர்கள் ஐசிசியின் விசார ணைக்கு உட்பட்டவர்கள். அந்த வீரர்கள் குறித்த எந்தத் தகவலும் ஐசிசியிடம் இருந்து இதுவரை வரவில்லை. அதனால் அவர்கள் 3 பேரும் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது அதற்கு ஐசிசிதான் பொறுப்பு. சம்பந்தப்பட்ட வீரர் ஐசிசியின் விசாரணை வரம்புக்குள் இருக்கும்போது அது தொடர்பாக ஐசிசிதான் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஐசிசி கூறியிருக்கிறது. அதனால் அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும். விசாரணை யின்போது ஏதாவது தகவல் கிடைத்தால் அது தொடர்பாக எங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்றார்.