

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று நியூஸிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இதனையடுத்து இமாலய வெற்றி இலக்கான ன 455 ரன்களை எதிர்த்து இங்கிலாந்து தற்போது விளையாடி வருகிறது. இன்று இன்னும் 75 ஓவர்கள் மீதமுள்ளன, நாளை 90 ஓவர்கள் மீதமுள்ளன, இங்கிலாந்துக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த வெற்றியை ஈட்டிவிட்டால் இங்கிலாந்து வரலாறு காணாத வெற்றியாக இது அமையும்.
4-ம் நாளான இன்று 338/6 என்று தொடங்கிய நியூஸிலாந்து இன்றும் தனது சுதந்திரமான அதிரடியைத் தொடர்ந்தது. 16 ஓவர்களில் 116 ரன்களை விளாசியது.
100 நாட் அவுட் என்று இருந்த நியூஸிலாந்து அணியின் வாட்லிங் 120 ரன்களில் ஆண்டர்சனிடம் இன்று வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய லுக் ரோன்க்கி 23 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார்.
மார்க் கிரெய்க் 77 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் சவுத்தி களமிறங்கி அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு 24 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் வெளுத்துக் கட்டினார்.
பவுலர் மேட் ஹென்றி டிக்ளேர் செய்வதற்கு சற்று முன் ஸ்டூவர் பிராடை 2 அபார சிக்சர்களை விளாசினார். 91 ஓவர்களில் நியூஸிலாந்து 454 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தார் மெக்கல்லம். பிராட் 3 ஓவர்களில் 42 ரன்களுடன் மொத்தமாக 16 ஓவர்களில் 94 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன், மார்க் உட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் என்று அனைவரும் ஓவருக்கு சராசரியாக 4 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து பந்து வீச்சு இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் தவிர சரியாக அமையவில்லை. காரணம் நியூஸிலாந்து தீவிர தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டம் ஆடியதே.
455 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவரும் இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.