

கொழும்புவில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தனது 2-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்குச் சுருண்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் பந்துவீச அழைக்கப்பட வேண்டிய தேவையே ஏற்படாமல் போனது.
உணவு இடைவேளையின் போது 70/2 என்று நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் அதன் பிறகு 68 ரன்களுக்கு மடமடவென 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களுக்கு மடிந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்காரா 18 ரன்களுடனும், குஷல் சில்வா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
42 ரன்கள் அடித்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்த மொகமது ஹபீஸை தனது டர்னால் ஏமாற்றிய கவுஷல் பவுல்டு செய்தார். ஷபிக் 2 ரன்னில் எல்.பி.ஆனார்.
பிறகு சர்பராஸ் அகமதுவின் மோசமான அழைப்புக்கு மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மிஸ்பா 7 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு கடந்த போட்டியின் போக்கை மாற்றி பாக்.கிற்கு வெற்றி தேடித்தந்த சர்பராஸ் அகமதுவும் கவுஷலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு 4 ஒவர்களே பாகிஸ்தான் இன்னிங்ஸ் நீடித்தது.
முன்னதாக சரிவைத் தொடங்கி வைத்தார் யூனிஸ் கான், இவர் 6 ரன்களில் தம்மிக பிரசாத் பந்தை விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முன்னதாக இலங்கைக்கு ஒரு அபாரமான வேகப்பந்து வீச்சாளர் கிடைத்துள்ளதைப் பற்றி கூறியாகவேண்டும். அவர் பெயர் துஷ்மந்த சமீரா. இவர் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இவருக்கு இது முதல் டெஸ்ட் போட்டி.
இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் சீராக வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை காலையில் ஆட்டிப்படைத்தார். சில சமயங்களில் மணிக்கு 150கிமீ வேகத்துக்கு அருகில் கூட வந்தார். இவர் கடைசியில் சுல்பிகர் பாபர் விக்கெட்டை பவுல்டு மூலம் வீழ்த்தினார், மொத்தம் 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு இவர் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினாலும் இவரது பந்து வீச்சு அறிவித்தது என்னவெனில் இலங்கைக்கு ஒரு அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் வந்துள்ளார் என்பதே.
தம்மிக பிரசாத்தும் தன்னால் இயன்ற வரை அந்தப் பிட்சில் பவுன்ஸ் செய்ய முயன்றார். அவர் அகமது ஷேஜாத், அசார் அலி, யூனிஸ் கான் ஆகியோரை வீழ்த்தினார்.
கவுஷல் 10.5 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பிரசாத் 3-ம், சமீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ரங்கன்னா ஹெராத் பந்து வீச அழைக்கப்பட வேண்டிய தேவையே ஏற்படவில்லை. அதற்குள் பாகிஸ்தான் மூட்டைக் கட்டப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இலங்கையில், தொடக்க வீரர் கருணரத்னே 28 ரன்களில் ஜுனைத் கானிடம் வீழ்ந்தார். வஹாப் ரியாஸ் வழக்கம் போல் அபாரமாக வீசி 9 ஓவர்கள் 2 மைடன்களுடன் 19 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். நாளை சில்வா, சங்கக்காரா எவ்வளவு நேரம் நீடிப்பார்கள் என்பதைப் பொறுத்து இலங்கையின் முன்னிலை தீர்மானிக்கப்படும்.