

இந்தோனேசியன் ஒபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸில் உலகின் நம்பர் 1 சீன வீரர் சென் லாங் என்பவரை இந்திய வீரர் காஷ்யப் அபாரமாக ஆடி வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் 12-ம் இடத்தில் உள்ள காஷ்யப் முதல் செட்டை 14-21 என்று இழந்தார். அதன் பிறகு தனது ஆட்டத்தை தீவிரமாக மேம்படுத்தினார். இதனால் உலகின் நம்பர் 1 சீன வீரரான சென் லாங்கை 14-21, 21-17, 21-14 என்று வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
சீன வீரர் சென் லாங்கின் அதீத ‘ரிப்ளெக்ஸ்’ முன் உலகில் எந்த வீரரும் நிற்க முடியாது என்று கூறப்படுவதுண்டு, ஆனால் காஷ்யப் ஸ்மாஷ் மற்றும் நெட் அருகில் வந்து ஆடுவது என்று இரண்டிலும் அசத்தினார்.
மேலும் இருவரும் இதுவரை 8 போட்டிகளில் ஆடியதில் காஷ்யப் 1-7 என்று இவரிடம் தோல்வியே கண்டிருந்தார். 2012-இலும் இதே தொடரில்தான் சென் லாங்கை வீழ்த்தினார் காஷ்யப்.
களத்தில் அதிவேகமாக நகர்ந்து கடுமையான ஸ்மாஷ்களை அடிப்பதில் புகழ்பெற்ற லாங், காஷ்யப்பின் சாதுரியமான ஆட்டத்தின் முன் நிறைய தவறுகளை இழைத்தார்.
முதல் செட்டில் சென் லாங் 21-14 என்று வென்ற பிறகே காஷ்யப் மீண்டெழுவார் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியவில்லை. ஆனால் முதல் செட்டிலும் 2-6 என்று பின் தங்கியிருந்த காஷ்யப் ஒரு சமயத்தில் 11-11 என்று சமன் செய்தார், ஆனால் அந்த செட்டை லாங் கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் கடும் போட்டி நிலவியது இருவரும் 7-7 என்று சமநிலை வகித்தனர். அதன் பிறகு லாங் தனது திறமையைக் காண்பித்து சவால் அளித்தாலும் காஷ்யப் அவரை ஒரு சில தவறுகளைச் செய்ய வைத்து ஆட்டத்தை 3-வது செட்டுக்குக் கொண்டு சென்றார்.
3-வது செட்டில் இருவரும் 2-2 என்ற நிலையில் அவரது சர்வீஸை முறியடித்து பிறகு பல ஸ்மாஷ்களுடன் 9-3 என்று முன்னேறினார் காஷ்யப். லாங் நிறைய தவறுகளை இழைக்க காஷ்யப் 14-5 என்று முன்னிலை பெற்றார். கடைசியில் 21-14 என்று லாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.