Published : 26 Jun 2015 02:58 PM
Last Updated : 26 Jun 2015 02:58 PM

காயத்தைப் பொருட்படுத்தாது பந்துவீசிய வஹாப் ரியாஸ்

பந்துவீசும் கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டும் காயத்துடனேயே 9 ஓவர்கள் வீசினார் பாகிஸ்தானின் அயராத வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் காயத்தைப் பொருட்படுத்தாது 9 ஓவர்கள் வீசிய வஹாப் ரியாஸ், தற்போது இடது கையில் நூலிழை எலும்பு முறிவு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலக நேரிட்டது.

முதல் இன்னிங்ஸில் நேற்று 138 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆன போது, பேட்டிங்கில் களமிறங்கிய வஹா ரியாஸ், இலங்கையின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா பந்து சற்றே எழும்ப கிளவ்வில் பலமாகத் தாக்கியது.

ஆனால் அவர் காயத்தைப் பொருட்படுத்தாது இலங்கை உடனேயே முதல் இன்னிங்சில் களமிறங்க 9 ஓவர்களை வீசினார். ஆனால் ஒவ்வொரு பந்து வீசிய பிறகும் கையை உதறிய படியே இருந்தார். எல்லைக்கோட்டருகே உடற்கூறு மருத்துவர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து வந்தார்.

கையில் நூலிழை எலும்பு முறிவு ஏற்பட்டும் அதனை பொருட்படுத்தாது 2 மணி நேரம் களத்தில் இருந்து 3 ஸ்பெல்களில் 9 ஓவர்கள் வீசினார்.

“கையில் காயம் ஏற்பட்டும், அதனைப் பொருட்படுத்தாது, மீண்டும் வந்து பல ஓவர்களை வீச வஹாப் ஆசைப் பட்டார். அவரது இந்த ஆட்ட உணர்வை நினைத்து பெருமையடைகிறோம், ‘ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்’ என்று பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பாராட்டியுள்ளார்.

தற்போது எக்ஸ்-ரே எடுக்கப்பட்டதில் அவருக்கு மெலிதான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது, அவர் நலம் பெற குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x