அகில இந்திய வாலிபால்: அரையிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம்.

அகில இந்திய வாலிபால்: அரையிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான அகில இந்திய வாலிபால் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்த சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24-வது அகில இந்திய வாலிபால் போட்டி தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஆடவர் பிரிவு போட்டியில் சென்னை ஐஓபி அணியும், கேரளா மின்வாரிய அணியும் மோதின.

இதில் முதல் செட்டை 25- 22 என்ற கணக்கில் ஐஓபி அணியும், 2-வது செட்டை 25- 19 என்ற கணக்கில் கேரளா மின்வாரிய அணியும் கைப்பற்ற, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. எனினும் பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஐஓபி அணி அடுத்த இரு செட்களை 25- 16, 25- 13 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டது.

இதையடுத்து நடைபெற்ற மகளிர் பிரிவு ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. முதல் செட்டை தெற்கு மத்திய ரயில்வே அணி 25- 13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 2-வது செட்டை மேற்கு ரயில்வே அணி 25- 13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

அடுத்த செட்டை தெற்கு மத்திய ரயில்வே அணி 25- 15 என்ற புள்ளிக்கணக்கிலும், 4-வது செட்டை மேற்கு ரயில்வே அணி 25- 21 என்ற புள்ளிக் கணக்கிலும் மாறி மாறி வென்றதால், ஆட்டம் 5-வது செட்டுக்கு நகர்ந்தது. அதில் மேற்கு ரயில்வே அணி 16- 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதன் மூலம் 3-2 என்ற செட் கணக்கில் மேற்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது.

மூன்றாவதாக நடந்த ஆடவர் பிரிவு ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், கேரளா போலீஸ் அணியும் மோதின. இதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 25- 22, 25- 15, 25- 16 என்ற கணக்கில் வெற்றி கண்டது. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in