

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் 2003, 2007 சாம்பியனான ஜெர்மனியும், 1991, 1999 சாம்பியனான அமெரிக்காவும் மோதவுள்ளன.
ஜெர்மனி தனது காலிறுதியில் பிரான்ஸையும், அமெரிக்கா தனது காலிறுதியில் சீனாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
கனடாவின் மான்ட்ரியால் நகரில் 25 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை அணியான ஜெர்மனி, பிரான்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸின் நெசிப் 64-வது நிமிடத்திலும், ஜெர்மனியின் சசிச் 84-வது நிமிடத்திலும் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப் பட்டது. அந்த 30 நிமிடத்தில் இரு அணிகளும் கோலடிக்காததைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5 வாய்ப்புகளிலும் கோலடித்த ஜெர்மனி, 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.
ஒட்டாவாவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. அமெரிக்கா தரப்பில் கார்லி லாய்ட் 51-வது நிமிடத்தில் கோலடித்தார்.