

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பால் டவுண்டன் பிபிசியிற்கு அளித்த நேர்காணலில் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் ஆர்வமில்லாமல் இருந்தார் என்பது உட்பட அவரது அணுகுமுறைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியிருந்தார். அவர் கூறுவது எதுவும் உண்மையல்ல என்று கெவின் பீட்டர்சன் அதற்குக் கொதித்துப் போய் கண்டனம் எழுப்பியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் 0- 5 என்று இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததற்கு பலிகடாவைத் தேடிக்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் பீட்டர்சனை அணியிலிருந்து நீக்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கலப்பான எதிர்வினைகள் வந்தன.
இந்நிலையில் வியாழக்கிழமை பால் டவுண்டன் பிபிசி-க்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியது வருமாறு:
"சிட்னி டெஸ்ட் போட்டியின் போது பீட்டர்சன் அளவுக்கு கவனமற்றும், ஆர்வமற்றும் இருந்த ஒரு வீரரை நாங்கள் அதுவரைக் கண்டதில்லை. அதன் பிறகே அவரைப்பற்றி அணி நிர்வாகத்தினரிடமும் வீரர்களிடமும் பேசினோம், அப்போது பீட்டர்சன் அணிக்குத் தேவையா என்பது குறித்த ஏகமனதான உணர்வு எழுந்தது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பீட்டர்சன் கூறியதாவது:
ஆஷஸ் தொடரில் நான் ஆர்வமற்று இருந்தேன் என்பது முழுக்க முழுக்க உண்மையற்ற ஒரு கூற்றாகும். நான் முழங்காலில் காயத்திற்காக ஊசி மருந்து எடுத்துக் கொண்ட சமயம் அது. அதனால் பீல்டிங்கில் அருகில் நான் நிற்க முடியாமல் போனது, என்னைப்பொருத்தவரை அந்த ஆஷஸ் தொடர் நான் நிர்ணயித்துக் கொண்ட தர நிர்ணயங்களை எட்டவில்லை என்பது உண்மைதான் என்றாலும் இங்கிலாந்துக்காக ஆடுவதில் நான் ஆர்வமற்று இருந்ததாகக் கூறுவது முற்றிலும் தவறு. நான் ஆஷஸ் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கும் இங்கிலாந்து வீர்ர்களுக்கும் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்பது அவர்கள் என் விவகாரத்தில் அளித்த பேட்டிகளும், கருத்துகளாலும் ஊர்ஜிதமாகியுள்ளது. எனது ஆட்டம் பற்றி டவுண்டன் கூறுகிறார். ஆனால் அவருக்கு ஒன்று நினைவு படுத்த விரும்புகிறேன், இந்த முறையில் நான் ஆடிவருவதுதான் 13,500 ரன்களை எனக்குப் பெற்றுத் தந்தது. 4 ஆஷஸ் தொடர் வெற்றிகளில் பெரும்பங்கு ஆற்றியுள்ளேன், உலக இருபது ஓவர் கிரிக்கெட்டில் 2010ஆம் ஆண்டு தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை அவருக்கு நினைவூட்டுவதோடு எனது கர்வமான கணங்கள் அவை என்பதையும் கூற விரும்புகிறேன்.
அதன் பிறகு உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை. நான் மீண்டும் இங்கிலாந்துக்கு ஆடுவேன் என்ற சிறு நம்பிக்கையை கூட அவர்கள் எனக்கு அளிக்கவில்லை.
இவ்வாறு கூறியுள்ளார் பீட்டர்சன்.