தேசிய ஜூனியர் தடகளம்: கேரளம் ஒட்டுமொத்த சாம்பியன்- தூத்தி சந்த், நவ்ஜீத் கௌர் அபாரம்

தேசிய ஜூனியர் தடகளம்: கேரளம் ஒட்டுமொத்த சாம்பியன்- தூத்தி சந்த், நவ்ஜீத் கௌர் அபாரம்
Updated on
2 min read

12-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் கேரள அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தூத்தி சந்த், நவ்ஜீத் கௌர் ஆகியோர் ஆசிய மற்றும் உலக தடகளப் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்தனர்.

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. கடைசி நாளில் நடைபெற்ற மகளிர் 200 மீ. ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை தூத்தி சந்த் 23.95 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் முன்னாள் தமிழக வீராங்கனை வேலு பாண்டீஸ்வரியின் தேசிய சாதனையை சமன் செய்தார்.

இதுதவிர ஆசிய மற்றும் உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். போட்டியின் முதல் நாளில் 100 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனை நிகழ்த்திய தூத்தி சந்த், சிறந்த வீராங்கனைக்கான விருதைத் தட்டிச் சென்றார். 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் அர்ச்சனா சுசீந்திரன் (24.70 விநாடிகள்), மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய் (24.86) ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் தமிழக வீரர் மோகன் குமார் (22.12 விநாடிகள்)), மேற்கு வங்கத்தின் சௌம்யதீப் சாஹா (22.26), பஞ்சாப் வீரர் கம்பர்தீப் சிங் (22.45) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

நவ்ஜீத் கலக்கல்

பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கௌர் தில்லான் 53.97 மீ. தூரம் வட்டு எறிந்து தனது “பெர்சனல் பெஸ்ட்டை” பதிவு செய்ததோடு, ஆசிய மற்றும் உலக தடகளப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றார். முன்னதாக 2-வது நாளில் குண்டு எறிதலில் பங்கேற்ற அவர், தேசிய சாதனை மட்டுமின்றி மேற்கண்ட இரு போட்டிகளுக்கும் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. வட்டு எறிதலில் 2-வது இடம்பிடித்த மகாராஷ்டிரத்தின் அனுஷி தேசாயும் (43.89) ஆசிய சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்றார். தமிழகத்தின் மகாலட்சுமி (41.03) 3-வது இடம்பிடித்தார்.

மகளிர் 800 மீ. ஓட்டத்தில் கேரளத்தின் ஜெஸ்ஸி ஜோசப் (2:06.34), மகாராஷ்டிரத்தின் அர்ச்சனா ஆதவ் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றதோடு, ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றனர்.

ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் ராஜஸ்தான் வீரர் சுமித் சௌத்ரி தனது 5-வது வாய்ப்பில் 13.34 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு, ஆசிய தடகளப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஆடவர் பிரிவில் ஹரியாணாவும் (135 புள்ளிகள்), மகளிர் பிரிவில் கேரளமும் (125 புள்ளிகள்) முதலிடத்தைப் பிடித்தன. மேற்கண்ட இரு பிரிவுகளிலும் தமிழக அணி 2-வது இடத்தைப் பிடித்தது. கேரள அணி 182.5 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஹரியாணாவுக்கு 2-வது இடம் (171 புள்ளிகள்) கிடைத்தது. பஞ்சாபைச் சேர்ந்த குண்டு எறிதல் வீரர் நவ்தேஜ்தீப் சிங் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

4 தேசிய சாதனைகள்

3 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 தேசிய சாதனைகளும், 12 போட்டி சாதனைகளும் (மீட் ரெக்கார்டு) நிகழ்த்தப்பட்டன. இதுதவிர இரண்டு தேசிய சாதனைகள் சமன் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in