Last Updated : 21 Jun, 2015 12:49 PM

 

Published : 21 Jun 2015 12:49 PM
Last Updated : 21 Jun 2015 12:49 PM

இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று நடைபெறுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி கண்டது. அந்தப் போட்டியில் வங்கதேச பவுலர் முஸ்தபிஸுர் ரஹ்மானை கேப்டன் தோனி முழங்கையால் இடித்த விவகாரமும், அதற்காக தோனிக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ஆட்டத்தில் கண்ட அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுக்கவும், தோனி விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சையிலிருந்து மீளவும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

ஆனால் வங்கதேச அணியோ இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிர மாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியை அனைத்துத் துறைகளிலும் முடக்கிய வங்க தேசம், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல் பட்டது. அதேபோன்றதொரு ஆட் டத்தை இன்றும் வெளிப் படுத்த அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுமாறும் கோலி

இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல் பட்டாலொழிய வங்கதேசத்தை வீழ்த்த முடியாது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தபோதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது.

பார்மில் இல்லாமல் தடுமாறி வரும் கோலி, ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் முறையே 3, 1, 1 ஆகிய ரன்களையே எடுத்துள்ளார். இந்திய அணிக்கு இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கும் ரஹானே, இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஜடேஜா ஆகியோர் சிறப்பாக ஆடுவதைப் பொறுத்தே இந்தியா வின் ரன் குவிப்பு அமையும்.

கவலையளிக்கும் பந்துவீச்சு

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா என எல்லோருடைய பந்துவீச் சையும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் சிதறடித்துவிட்டனர். குறிப்பாக மோஹித் சர்மா 4.4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார். எனவே அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டிய சரியான தருணமாக இன்றைய ஆட்டம் பார்க்கப்படுகிறது. மோஹித் சர்மா நீக்கப்படும்பட்சத்தில் ஸ்டூவர்ட் பின்னி அல்லது தவல் குல்கர்ணி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின் நம்பிக்கையளிக்கிறார்.

பலம் வாய்ந்த தொடக்க ஜோடி

வங்கதேச அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறது. பேட்டிங்கில் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுவது தொடக்க வீரர்களான தமிம் இக்பால், சவும்ய சர்க்கார் ஆகியோர்தான். கடந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த ஜோடி, இன்றும் சிறப்பாக ஆடி ரன் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்ஹசன், சபீர் ரஹ்மான், நாசிர் ஹுசைன், கேப்டன் மோர்ட்டஸா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

மிரட்டும் முஸ்தபிஸுர்

வேகப்பந்து வீச்சைப் பொறுத் தவரையில் முஸ்தபிஸுர் ரஹ்மான் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார். கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்ட அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதோடு மட்டுமின்றி கேப்டன் தோனியுடனான மோதல் விவகாரமும் அவரை ஒரே போட்டி யில் பிரபலமடையச் செய்துள்ளது. அதனால் அவர் இந்தப் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபெல் ஹுசைன், தஸ்கின் அஹமது, மோர்ட்டஸா ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷகிப் அல்ஹசன், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறார்.

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், அம்பட்டி ராயுடு, தவல் குல்கர்னி, அக் ஷ்ர் படேல், ஸ்டூவர்ட் பின்னி.

வங்கதேசம்:

மஷ்ரஃபே மோர்ட்டஸா (கேப்டன்), தமிம் இக்பால், சவும்ய சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல்ஹசன், சபீர் ரஹ்மான், நாசிர் ஹுசைன், ரூபெல் ஹுசைன், தஸ்கின் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், ரோனி தலுக்தார், மோமினுல் ஹக், அராபத் சன்னி.

போட்டி நேரம்: பிற்பகல் 2.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

10-வது வெற்றியை நோக்கி…

வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 9 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 5-0 என்ற கணக்கிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கிலும் வென்றுள்ள வங்கதேசம், இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தும்பட்சத்தில் அது 10-வது வெற்றியாக அமையும்.

மிரட்டும் மழை

டாக்காவில் இன்று 60 சதவீத மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய ஆட்டம் மழை யால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x