

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே.
அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேலியாவின் போர்ட் அகஸ்தா அருகே பாக்ஸ்டர் அகதிகள் தடுப்பு காவல் முகாமில் தன்னை மிகவும் பாதித்த விஷயம் ஒன்றை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது வங்கதேச அகதி ஒருவர், இவர் கிரிக்கெட் ரசிகரும் கூட, இயன் சாப்பலிடம் உரையாடியுள்ளார்.
இயன் சாப்பல் அந்த உரையாடலை நினைவுகூரும் போது, “இந்த இடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த வங்கதேசத்தவர் என்னிடம் கேட்டார். நான் கூறினேன் இது சிறை போன்று உள்ளது என்றேன். போர்ட் அகஸ்தா சிறைச்சாலையை கடந்துதான் இந்த முகாமுக்கு நாங்கள் வந்தோம், ஆனால் சிறைச்சாலையே பரவாயில்லை என்ற உணர்வை பாக்ஸ்டர் தடுப்புக் காவல் முகாம் என்னில் ஏற்படுத்தியது.
ஆனால் அவர் என்ன கூறினார் தெரியுமா? ‘இந்த முகாம் ஜெயிலை விடவும் மோசமாக உள்ளது என்று, சிறையில் விதிமுறைகள் இருக்கும். அங்கு ஒழுங்காக நடந்து கொண்டால் நம்மை பாராட்டவும் செய்வார்கள், பரிசுகளும் கிடைக்கும், சிறைத் தண்டனை காலம் கூட குறைக்கப்படும், ஆனால் இங்கு ஒரு அடி அதிகமாக எடுத்து வைத்தால் எங்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. நன்னடைத்தைக்கும் மரியாதை இருப்பதில்லை என்றார்.
இது என்னை உலுக்கிவிட்டது. என் வாழ்நாளில் முதல் முறையாக என் நாட்டை நினைத்து நான் பெருமையடைய முடியத தருணமாக அது அமைந்தது” என்றார்.
2001-ம் ஆண்டு இறுதியில் தம்பா நெருக்கடி தருணத்தில் தொலைக்காட்சி செய்தி ஒன்று தன்னை அகதிகளின் துயரம் பற்றி சிந்திக்க வைத்தது என்று கூறுகிறார் இயன் சாப்பல். அந்த செய்தியை பார்த்து அன்று அவர் மிகவும் கொதிப்படைந்ததாக இயன் சாப்பலின் மனைவி பார்பாரா ஆன் தெரிவிக்கும் போது, “நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் போதுதான் கெட்டவை நடக்கின்றன” என்றார்.
இது பற்றி ஆஸ்திரேலிய ஊடகம் இயன் சாப்பலிடம் பேசிய போது, “அகதிகள் வந்திறங்கும் படகை நிறுத்தும் மோசமான ஒரு விஷயத்தை நான் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறேன். போர்கள் ஏன் நடக்க வேண்டும்? போரை நிறுத்த முடியாதா? போர்தானே அகதிகளை உருவாக்குகிறது.. நாம் ஏன் இதனை அவர்களை நோக்கி கேட்கக் கூடாது? அகதிகளைக் கடத்துவோர்களுக்கு வழங்கும் உதவிகளை முதலில் நிறுத்த வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு மோசமான விஷயம் நடக்குமென்றால் அது ஒருவர் தன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தமே. அதுவும் தப்பி ஓடவேண்டியிருப்பது மிகவும் மோசம். நான் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியே சென்றால், என்னை எப்படி நடத்த வேண்டும்? இதனால்தான் கூறுகிறேன் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படக்கூடாது என்று.
நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டிலும் தைரியத்திலும் சிறந்து விளங்குகிறோம். விளையாட்டில் இதனை பாராட்டவும் செய்கிறோம். நாம் ஏன் இதனை பிறருக்காக நன்மை செய்வதில் காட்டக்கூடாது? வேறு தெரிவின்றி அகதிகளாக வருபவர்களைப் பாதுகாப்பதில் நாம் ஏன் இத்தகைய உறுதியையும், தைரியத்தையும் காட்டக்கூடாது?” என்று காரசாரமாக கூறியுள்ளார்.