

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு கேமரூன், ஜப்பான் அணிகள் முன்னேறியுள்ளன.
கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. இதன்மூலம் சி பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஜப்பான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
எட்மாண்டன் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திய கேமரூன் 6 புள்ளிகளுடன் சி பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் அந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்தது. யாரும் எதிர்பாராத கத்துக்குட்டி அணியான கேமரூன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து நைஜீரியா 1999-ல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதற்கடுத்தபடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய 2-வது ஆப்பிரிக்க அணி கேமரூன் ஆகும்.
இதுதவிர நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 3-வது இடத்தைப் பிடித்த சிறந்த 4 அணிகளின் அடிப்படையில் நெதர்லாந்தும், ஸ்விட்சர்லாந்தும் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து அணி கனடா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடித்தது. சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், கேமரூனுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடித்தது.