Published : 12 Jun 2015 09:54 AM
Last Updated : 12 Jun 2015 09:54 AM

அகில இந்திய வாலிபால்: 3-வது நாளில் கேரளா ஆதிக்கம்

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான அகில இந்திய வாலிபால் போட்டியின் 3-வது நாளில் கேரளா அணிகள் ஆதிக்கம் செலுத்தின.

மகளிர் பிரிவில் கேரளா போலீஸ் அணியும், ஆடவர் பிரிவில் கேரளா மின்வாரிய அணியும் வெற்றி பெற்றன.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி இந்திய வருமான வரித்துறை அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த முதல் செட்டை வருமான வரித்துறை அணி 25- 23 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. ஆனால், 2-வது செட்டை 25- 21 என்ற புள்ளிக்கணக்கில் மேற்கு ரயில்வே அணி வென்றது. தொடர்ந்து நடந்த 3-வது மற்றும் 4-வது செட்களை வருமான வரித்துறை அணி 25- 22, 26- 24 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதன் மூலம் இப்போட்டியில் வருமான வரித்துறை அணி 3- 1 என்ற செட் கணக்கில் வாகை சூடியது.

மற்றொரு ஆடவர் பிரிவு ஆட்டத்தில் கேரளா மின்வாரிய அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின. இதில் கேரளா மின்வாரிய அணி 25- 19, 25- 21, 25- 20 என்ற செட் கணக்கில் வென்றது.

மகளிர் பிரிவு ஆட்டத்தில் கேரளா போலீஸ் அணியும், மும்பை மத்திய ரயில்வே அணியும் மோதின. இதில் கேரளா போலீஸ் அணி 25- 19, 25- 15, 25- 14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x