

கிரிக்கெட் மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதில் தனக்கு கட்டுப்பாடு தேவை என்பதை ஒப்புக் கொண்ட விராட் கோலி, இந்த விஷயத்தில் தன்னை பிற கேப்டன்களுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை என்றார்.
ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ, கிரிக்கெட் மன்த்லி-க்கு அவர் அளித்த பேட்டியின் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அதில் உணர்சிகளை மைதானத்தில் கொட்டுவது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, “நாம் என்ன நினைக்கிறோமோ அதனை எதிரணியினர் தெரிந்து கொள்ளும்படியாக நடந்து கொள்வதில் பயனில்லை என்பது புரிகிறது, இதன் மூலம் அவர்கள் தேவையற்ற சாதகங்களைப் பெறுகின்றனர் என்பதும் புரிகிறது,
களத்தில் அணியை வழி நடத்திச் செல்லும் போது முகத்தில் வெளிப்படையாக உணர்ச்சிகளைக் காட்டக்கூடாது என்பது மிக முக்கியமானதுதான். இந்த விஷயத்தில் நான் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்” என்றார் விராட் கோலி.
ஒரு அணியின் தலைவராக எதையும் விட்டுக் கொடுக்காத, எதையும் காண்பித்துக் கொள்ளாத தடித்த தோலுடையவராக இருக்க வேண்டும் என்று ஸ்டீவ் வாஹ் கோலிக்கு அறிவுரை வழங்கியிருந்தார். மேலும் முன்னாள் வீரர்கள் சிலர் தோனியையும், கோலியையும் இருவேறு துருவங்களாக வர்ணித்து ஒப்பிட்டிருந்தனர்.
இது பற்றி விராட் கோலி கூறும் போது, “என்னைப் பற்றி தீர்ப்புகள் வழங்குவதைப் பார்க்கும் போது, எப்படி 2 அல்லது 3 ஆட்டங்களில் பார்த்துவிட்டு ஒப்பிட முடிகிறது என்பது எனக்கு வேடிக்கையாக உள்ளது.
முதல் 2 அல்லது 3 போட்டிகளில் ஒருவர் தோல்வி அடைந்தால், அதாவது ஒரு வீரராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 2 அல்லது 3 போட்டிகளில் சோபிக்காமல் போனால் உடனே 'இவர் தேறமாட்டார்' என்று தீர்ப்பு வழங்குகின்றனர். இப்படியான தீர்ப்பை நான் மற்றவர்கள் பற்றி ஒருபோதும் வழங்க மாட்டேன். ஒருவர் மாறவே மாட்டார் என்று முடிவுக்கு வருவதை நான் விரும்பவில்லை.
மேலும் ஏன் ஒப்பிட்டு பேச வேண்டும்? என்னுடைய குணாதிசியம் வேறுபட்டது. என்னுடைய ஆளுமை வித்தியாசமானது. ஆனால், உலகம் முழுதும் கேப்டன்சியைப் பொறுத்தமட்டில் சில விஷயங்கள் ஒரே சீரானதுதான். நீங்கள் குறிப்பிட்டது போல் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிக்காமல் இருப்பது, திடமான மனநிலையில் இருப்பது, ஆட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கவனிப்பது போன்ற விஷயங்கள் ஒன்றுதான். ஆனால் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ளப்போவதில்லை அல்லது பிறர் விரும்புவதற்கேற்ப நான் மாற வேண்டும் என்பதும் கிடையாது.
சில சிறிய விஷயங்களில் நான் இன்னும் மேம்பாடு அடைய வேண்டும் என்பது உண்மைதான், ஆனால், கேப்டனாக ஆக்ரோஷமாகச் செயல்படுவதில் நான் மாறப்போவதில்லை” என்று திட்டவட்டமாக பதிலளித்தார் விராட் கோலி.