Published : 26 Jun 2015 10:00 PM
Last Updated : 26 Jun 2015 10:00 PM

சுவாரசியமற்ற ஆட்டத்தில் ஆனந்த் டிரா: டோபலோவ் சாம்பியன்

நார்வே செஸ் தொடரை பல்கேரிய வீரர் வசெலின் டோபலோவ் வென்றார். இந்தியாவின் ஆனந்துடனான ஆட்டம் எந்த வித சுவாரசியமும் இன்றி டிரா ஆனது.

டிரா ஆனதால் டோபலோவ் அதிக புள்ளிகள் பெற்ற நிலையில் சாம்பியன் ஆனார். விஸ்வநாதன் ஆனந்த் கறுப்புக் காய்களுடன் ஆடினார். ஆட்டம் தொடங்கி அரைமணி நேரத்துக்குள்ளாகவே இருவருக்கும் போராடும் குணம் இல்லாத நிலையில் கைகுலுக்கி டிராவுக்கு ஒப்புக் கொண்டனர்.

ஆட்டம் என்னவோ விறுவிறுப்பாகவே தொடங்கியது 18-வது மூவில் அப்படியே இருவரும் செய்ததையே செய்து மேலும் ஆட்டத்தைக் கொண்டு சென்று போட்டியை வெல்ல முயற்சி செய்யவில்லை. இது ஒரு ஏமாற்றமே.

டோபலோவ் தனது இடது புற வெள்ளைக்கட்ட குதிரையை முன்னே நகர்த்த ஆனந்த் தனது கருப்புக் கட்ட பிஷப்பை சில கட்டங்கள் முன்னால் நகர்த்தி வெட்டுவதாக அச்சுறுத்தினார்.

ஆனால் டோபலோவ் அசரவில்லை. அவர் ஏற்கெனவே தனது கருப்புக் கட்ட பிஷப்புக்கு வழி ஏற்படுத்தியிருந்ததால், ஆனந்தின் குதிரையை குறிவைத்து கொண்டு சென்றார், அதாவது பிஷப், ஆனந்தின் குதிரை, பிறகு நேராக ஆனந்தின் குயீன் இருந்தது.

ஆனந்த் உடனே டோபலோவ் பிஷப்பை விரட்டி அடிக்க ஒரு சிப்பாயை ஒரு கட்டம் முன்னே நகர்த்தினார். ஆனால் பின்னால் நகராத டோபலோவ் ஆனந்தின் குதிரையை காலி செய்தார். இப்போது பவர் குறைவான டோபலோவின் பிஷப்புக்கு நேராக வெட்டுபடும் நிலையில் ஆனந்தின் குயின். ஆனால் பேக்-அப் இல்லாததால் ஆனந்த் தனது ராணியினால் டோபலோவின் பிஷப்பை காலி செய்தார். இவையெல்லாம் 6-வது மூவில் நடந்து விட்டது.

7-வது மூவில் ஆனந்த் ராஜாவை உள்ளே நகர்த்தி யானைமூலம் பாதுகாப்பு கொடுக்கும் ‘கேசில்’ அமைத்துக் கொண்டார். அடுத்த மூவில் ஆனாலும் தேவையில்லாமல் தனது சிப்பாய் ஒன்றை இழந்தார் ஆனந்த். இதனை ஏன் செய்தார் என்பதும் புரியவில்லை. அதன் பிறகு ஆனந்த் தனது வலப்புறத்திலிருந்து மற்றொரு சிப்பாயை டோபலோவின் குதிரையை குறிவைத்து நகர்த்தினார். ஆனால் டோபலோவின் மற்றொரு குதிரை ஆனந்தின் சிப்பாயைக் காவுவாங்கியது. எனவே இதுவும் ஒரு புரியாத புதிர் ஆனந்த் மூவ்.

ஆரம்பத்தில் ஆனந்த் கொண்டு வந்த பிஷப் அப்படியே டோபலோவ் பகுதியில் கேட்பாரற்று நிற்க டோபலோவ் தனது குயீன் மூலம் அதனைக் காலி செய்ய ஒரு நகர்வு மேற்கொண்டார். அதனைத் தடுக்க பிஷப்பை அவர் வெட்டினால் நாம் குதிரையால் அவரது குயீனைக் காலி செய்யலாம் என்ற தவறான கணிப்பில் தனது இடத்தில் இருந்த வலப்பக்க குதிரையை அதன் போக்கில் நகர்த்தினார் ஆனந்த். ஆனால் அங்கு டோபலோவின் குதிரை தயாராக இருந்ததை கவனித்தாரா இல்லையா என்று புரியவில்லை, தனது குதிரையையும் இழந்தார் ஆனந்த்.

மேலும் புதிரானது தனது கறுப்புக் கட்ட பிஷப்பை மேலும் ஒரு கட்டம் முன்னேற்றி நகர்த்தியது. யானை நேராக ஆனந்தின் பிஷப்பை வெட்டி வீழ்த்தியது.

அதன் பிறகு அருமையான ஆட்டம் கைவசம் இருந்தும், அன்று 7-வது சுற்று ஆட்டத்தில் அரோனியனும், ஆனந்தும் ஆளுக்கொரு பிஷப்பை மாறி மாறி ஒரே கட்டத்தில் திரும்பத் திரும்ப நகர்த்தி டிராவுக்கு ஆடியது போல், இந்த முக்கிய இறுதிப் போட்டியிலும் டோபலோவ் மற்றும் ஆனந்த் ஆகியோர் தங்களது பிஷப்பை மாறிமாறி ஒரே கட்டத்தில் நகர்த்தி ஆட்டத்தை முடிவற்ற நிலைக்கு இட்டுச் சென்று கடைசியில் டிரா என இருவரும் கைகொடுத்துக் கொண்டனர்.

டோபலோவ் நார்வே செஸ் போட்டித் தொடரை வென்றார். ஆனந்த் 2-ம் இடம் பெற்றார். மொத்தமாக தனக்கு நல்ல ஒரு தொடராக அமைந்தது என்று ஆனந்த் தெரிவித்தார். ஆனால் இறுதிச் சுற்றில் ஆனந்த், டோபலோவ் இருவருமே ஏமாற்றமளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x