பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் ஆட முடியுமா? நவீன கிரிக்கெட் வீரர்களுக்கு சோபர்ஸ் சவால்

பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் ஆட முடியுமா? நவீன கிரிக்கெட் வீரர்களுக்கு சோபர்ஸ் சவால்
Updated on
1 min read

கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான கேரி சோபர்ஸ், நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் சில ஷாட்கள் பற்றி கூறும்போது, கவசங்கள் இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் பல ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் ஹெல்மெட், முகக்கவசம் இன்னபிற கவசங்களை கழற்றி விட்டு அத்தகைய ஷாட்களை ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் ஆடுகிறார்களா என்பதையும் பார்ப்போம்.

கடந்த கால வீரர்களுக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்று ஆடும் சில ஷாட்களை ஆட முடியவில்லை. குறிப்பாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ஆடும் ஸ்கூப் ஷாட்டை ஹெல்மெட் போன்ற கவசங்கள் இல்லாமல் ஆடிவிட முடியுமா? ஷாட் டைமிங் கிடைக்கவில்லை என்றால் அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது.

தற்போது முகக்கவசத்துடன் கூடிய ஹெல்மெட் இருப்பதால் பயமற்று இத்தகைய ஷாட்களை ஆட முடிகிறது.

ரிவர்ஸ் ஸ்வீப் ஒரு கடினமான ஷாட், சாதாரண வீரர்கள் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய துணிய மாட்டார்கள். இந்த ஒருஷாட்டை நான் இளம் வீரர்கள் விளையாட பரிந்துரை செய்வேன். ஆனால் ஸ்கூப் ஆடுவது கொஞ்சம் ஓவர்தான்.

ஆனால் ஸ்விட்ச் ஹிட், அதாவது வலது கை பேட்ஸ்மென் திடீரென இடது கை பேட்ஸ்மென் போலவும், இடது கை வீரர் திடீரெனெ வலது கை பேட்ஸ்மெனாகவும் ஸ்டான்ஸ் மாற்றி ஆடும் ஷாட்டை நான் ஏற்க மாட்டேன்.

இதே பவுலர் ஒருவர் திடீரென மாற்றினால் நோ-பால் என்று கூற மாட்டோமா, அதே போல்தான் பேட்ஸ்மென்களுக்கும் தடை போட வேண்டும். ஏனெனில் இடது கை பேட்ஸ்மெனுக்கான பீல்ட் செட் அப் செய்யும் போது திடீரென வலதுகைக்கு மட்டையை மாற்றி வலது கை பேட்ஸ்மென் போல் ஆடுவது பவுலருக்கு செய்யப்படும் நியாயமாகாது. மொத்த பீல்டிங் அமைப்பையும் கேலிக்கூத்தாக்கும் ஸ்விட்ச் ஹிட்டை நான் ஆதரிக்க மாட்டேன்.

ஆட்டம் பொதுவாகவே தற்போது ஒருதலைபட்சமாக பேட்ஸ்மென்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என்றே நான் வலிமையாக கருதுகிறேன்”

இவ்வாறு கூறினார் கேரி சோபர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in