

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.
இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தும்பட்சத்தில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சென்னை முதல் இரு இடங்களையும் உறுதி செய்து விடும்.சன்ரைஸர்ஸ், கொல்கத்தா, பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதால், அந்த அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே சூப்பர் கிங்ஸின் பிளே ஆப் வாய்ப்பு அமையும்.
ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட பஞ்சாப் அணி, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க விரும்பும். அதனால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வரும் சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலம் கொண்டதாக இருந்தபோதும், கடந்த ஆட்டத்தில் டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் மிகுந்த எச்சரிக்கையோடு விளையாடும்.
மெக்கல்லம்-டுவைன் ஸ்மித் கூட்டணி வலுவான தொடக்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் சூப்பர் கிங்ஸ் நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, கேப்டன் தோனி, டுவைன் பிராவோ உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் கடந்த ஆட்டத்தில் விளையாடாத ஆசிஷ் நெஹ்ரா இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம்பெறும்பட்சத்தில் ஈஸ்வர் பாண்டே நீக்கப்படலாம். நெஹ்ரா தவிர, மோஹித் சர்மா, பிராவோ ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, பவன் நெகி கூட்டணியை நம்பியுள்ளது சூப்பர் கிங்ஸ்.
சென்னையில் நடைபெற்ற முந்தைய சுற்று ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட பஞ்சாப், இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸுக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட பஞ்சாப், அதேபோன்றதொரு ஆட்டத்தை இன்றும் ஆட முயற்சிக்கும்.
விருத்திமான் சாஹா, மனன் வோரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், பெய்லி, அக் ஷர் படேல் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பஞ்சாப்பின் ரன் குவிப்பு அமையும். வேகப்பந்து வீச்சில் சந்தீப் சர்மா-அனுரீத் சிங் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேலையும் நம்பி யுள்ளது பஞ்சாப்.
போட்டி நேரம்: மாலை 4
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
இதுவரை
இவ்விரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் சூப்பர் கிங்ஸ் 9 முறையும், பஞ்சாப் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.
கொல்கத்தா-ராஜஸ்தானுக்கு வாழ்வா, சாவா ஆட்டம்
மும்பையில் இன்று நடைபெறும் மற்றொரு ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.
இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். கொல்கத்தா அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.