

இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற சர்ரே அணிக்காக விளையாடி முச்சதம் கண்ட கெவின் பீட்டர்சனை மீண்டும் அணியில் தேர்வு செய்யும் வாய்ப்பில்லை என்று ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் முடிவு கட்டியதன் பின்னணியில் கேப்டன் அலிஸ்டர் குக் சார்ந்த நலன்கள் இருந்தது உறுதியாகியுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தி டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
பீட்டர்சனுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் இயன் பெல், அவர் தான் சேர்ந்து விளையாடியதிலேயே சிறந்தவர் கெவின் பீட்டர்சன் என்றும் அவருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கும் பிரச்சினைகள் இருப்பதாக தனக்கு தெரியவில்லை, ஒருவேளை பின்னணியில் இருந்திருக்கலாம் அது பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இப்போது பின்னணி பற்றி இயன் பெல் குறிப்பிட்டது கேப்டன் அலிஸ்டர் குக் மற்றும் பீட்டர்சனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளே என்பது தெரியவந்துள்ளது.
அதாவது பீட்டர்சன் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டால் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு குக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பீட்டர்சன் தனது புத்தகத்தில் அலிஸ்டர் குக் பற்றி வைத்த கடும் விமர்சனங்கள் மற்றும் ட்விட்டரில் பீட்டர்சன் ஆதரவாளர்கள் குக் மீது வைத்த விமர்சனங்கள் ஆகியவை பீட்டர்சனை மன்னிக்க முடியாத தீவிர நிலைக்குத் தள்ளிவிட்டதாக குக் கூறியதாக தெரிகிறது. மேலும், குக் மீதான ட்விட்டர் விமர்சனங்கள் குக் மனைவி ஆலீஸையும் கண்கலங்கச் செய்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
எனவே நியூஸிலாந்து, ஆஷஸ் தொடரை மனதில் கொண்டு பீட்டர்சனா, குக்கா என்ற முடிவில் இயக்குநர் ஸ்ட்ராஸ் குக் பக்கம் முடிவெடுத்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.