

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் சென்னை வருமான வரித்துறை மற்றும் பெங்களூரு கனரா வங்கி அணிகள் அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளன.
கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 7-வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதியில் சென்னை வருமான வரித்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஆர்.சி.எப். அணியைத் தோற்கடித்தது. வருமான வரித்துறை அணி தரப்பில் அருண் 25-வது நிமிடத்தில் கோலடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது காலிறுதியில் பெங்களூரு கனரா வங்கி அணியும், ஜலந்தர் சிக்னல்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களுர் கனரா வங்கி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
15-வது நிமிடத்தில் கனரா வங்கி வீரர் சேஷா கவுடா ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 41-வது நிமிடத்தில் சோமன்னாவும், 43-வது நிமிடத்தில் சுவாமியும் கோல் அடிக்க, 3-0 என முன்னிலை பெற்றது கனரா வங்கி. இதன்பிறகு ஜலந்தர் சிக்னல்ஸ் அணியில் 56-வது நிமிடத்தில் கைத்தா ஒரு கோலும், 70-வது நிமிடத்தில் ராணா ஒரு கோலும் அடிக்க, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
கடைசிக் கட்டத்தில் ஜலந்தர் அணி போராடியபோதும் கோலடிக்க முடியவில்லை. இதனால் 3-2 என் கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று மாலை நடைபெறும் 3-வது காலிறுதியில் போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் அணியும், சண்டீகர் சி.ஐ.எஸ்.எப். அணியும் மோதுகின்றன. தொடர்ந்து நடைபெறும் 4-வது காலிறுதியில் ஜலந்தர் பி.எஸ்.எப். அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதுகின்றன.