வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்
Updated on
1 min read

மிர்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 328 ரன்களில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என்று கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் பாகிஸ்தானின் அசார் அலி தேர்வு செய்யப்பட்டார்.

550 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு 4-ம் நாளான இன்று 63/1 என்று களம் கண்ட வங்கதேசம் இன்று சுமார் 42 ஓவர்களில் மீதி விக்கெட்டுகளை மடமடவென இழந்து 57-வது ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்த அணியின் ஷஹாதத் ஹுசைன் முதல் நாள் ஆட்டத்திலேயே காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச அணியில் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.

யாசிர் ஷா பந்துகள் திரும்பின, எழும்பின, இதனால் வங்கதேசம் திணறியது.

முதலில் தமிம் இக்பால், இம்ரான் கானின் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து 42 ரன்களில் வெளியேறினார். மஹமுதுல்லா, வஹாப் ரியாஸின் பவுன்சர்களை எதிர்கொண்டார். ஆனால் இம்ரான் கான் இவரது விக்கெட்டை கைப்பற்றினார். எட்ஜை 2-வது ஸ்லிப்பில் யூனிஸ் கான் பிடித்தார்.

ஷாகிப் அல் ஹசன் தேவையில்லாமல் ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று 13 ரன்களில் ஹபீஸ் பந்தை தூக்கி அடித்து மிட் ஆஃபில் முடிந்து போனார்.

முஷ்பிகுர் ரஹிம் 8 பந்துகளில் ரன் எடுக்காமல், 9-வது பந்தில் யாசிர் ஷா-வின் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டு 0-வில் வெளியேறினார்.

மொமினுல் ஹக், வஹாப் ரியாஸை சிறப்பாக ஹூக், புல் ஷாட்கள் ஆடினார். ஸ்பின்னர்களையும் விரைவாக கால்களை நகர்த்தி நன்றாக விளையாடி 68 ரன்கள் எடுத்து யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு சவுமியா சர்க்கார், வஹாப் ரியாஸின் லெக் திசைப் பந்தை கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவர்தான் மொமினுல் அவுட் ஆனார்.

143/7 என்ற நிலையில் சுவாகத ஹோம் 55 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். மொகமது ஷாகித் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 57-வது ஓவரில் 221 ரன்களுக்கு வங்கதேசத்தின் கதை முடிந்தது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் பெற்ற ஒரே வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தானை, வங்கதேசம் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in