

ஐபிஎல் கிரிக்கெட் முதல் தகுதிச் சுற்றில் மும்பையிடம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை நடைபெறும் 2-வது தகுதிச் சுற்றில் விளையாட காத்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
2-வது வாய்ப்பு
சென்னை அணி இந்த போட்டி யில் தோற்றபோதிலும், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேற 2-வது வாய்ப்பு உள்ளது.
அதன்படி வெளியேற்றும் சுற்றில் வெற்றியடையும் அணியுடன் சூப்பர் கிங்ஸ் அணி நாளை பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
சிறப்பான தொடக்கம்
முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அவரது முடிவு சரி என்பதற்கு ஏற்ப தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ், பார்தீவ் படேல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் திணறிய அந்த ஜோடி பின்னர் சென்னை பந்து வீச்சை சிதறடித்தது. சிம்மன்ஸ் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரை சதத்தைக் கடந்தார்.
மும்பை அணி 90 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பிராவோ வீசிய 11-வது ஓவரில் பார்தீவ் படேல் அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து ரோஹித் சர்மா களம் இறங்கினார். ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 65 ரன்களை எடுத்தார். அடுத்து பொல்லார்டு களம் இறங்கினார்.
சிம்மன்ஸ் அவுட் ஆனதும் மும்பை அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. ரோஹித் சர்மா 19 ரன்னிலும், அடுத்து வந்த பாண்டியா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்த ராயுடு 10 ரன்னில் வெளியேறினார்.
பொல்லார்டு விளாசல்
அந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு 17 பந்தில் 41 ரன்களை விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் மும்பை குவித்தது.
அடுத்து பேட்டிங்கை தொடங் கிய சென்னை அணியில் தொடக்க வீரர் ஸ்மித், முதல் ஓவரிலேயே நடுவரின் தவறான முடிவால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக ஹசியுடன் டு பிளெஸ்ஸி ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாட முற்பட்ட ஹஸி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். எப்போதுமே பிளே ஆப் சுற்றில் சிறப்பாக விளையாடும் ரெய்னா இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது சூப்பர் கிங்ஸ் அணி 10.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. எனவே எப்படியும் அணி வெற்றி பெறும் என்று சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் இந்த விக்கெட்டை எடுத்தார். அதுவரை நிதானமாக ஆடி வந்த டூ பிளெஸ்ஸியும் 14-வது ஓவரில் 45 ரன்களுடன் வெளியேறினார். இதன் பிறகு சரிவு தொடர்ந்தது.
அடுத்து, பிராவோ, ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15-வது ஓவரில் பிராவோ (20 ரன்கள்), பவண் நெகி (3 ரன்கள்) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த ஜடேஜா அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அஸ்வின், மோஹித் சர்மா ஜோடி சேர்ந்தனர். 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 157 ரன்கள் எடுத்தி ருந்தது.
25 ரன்களில் வெற்றி
இதனால் 12 பந்துகளில் 31 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வலுவான பேட்ஸ்மேன்கள் களத்தில் இல்லை. மலிங்கா வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்தார்.அடுத்த பந்தில் மோஹித் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் அஸ்வின் 2 ரன் எடுத்தார். அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
5-வது பந்தில் மோஹித் ஒரு ரன் எடுத்தார். 6-வது பந்தில் நெஹ்ரா கடைசி விக்கெட்டாக விழுந்தார். இதையடுத்து 19 ஓவர்களில் 162 ரன்களுக்கு சூப்பர் கிங்ஸ் ஆட்டமிழந்தது. மும்பை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசி கட்டத்தில் விளாசி மும்பையின் ஸ்கோரை உயர்த்திய பொல்லார்டு ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
3-வது முறையாக..
மும்பை இண்டியன்ஸ் அணி 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 2013-ம் ஆண்டு சூப்பர் கிங்ஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வென்று சாம்பியன் ஆனது.
இதுவரை நடைபெற்றுள்ள 7 ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி யுள்ளது. இதில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.