Published : 11 May 2015 03:18 PM
Last Updated : 11 May 2015 03:18 PM

ஜடேஜா, மெக்கல்லம் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை மீண்டும் முதலிடம்

சேப்பாக்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்தது.

டாஸ் வென்ற தோனி தயங்காமல் பேட் செய்ய முடிவெடுக்க, பிரெண்டன் மெக்கல்லம் 61 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வாட்சன், ஸ்மித், கருண் நாயர், ஹூடா அகிய முக்கிய 4 விக்கெட்டுகளை ஜடேஜா கைப்பற்றி 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என்று முடிந்தது.

டிவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா அடுத்தடுத்து ஆட்டமிழக்க 15/2 என்ற நிலையில் மெக்கல்லம் மட்டுமே இந்த போட்டியில் ஒரே அரைசதம் கடந்த ஸ்கோரை அடித்தார்.

அவரது அனாயாச மட்டைச் சுழற்றலுக்கு உதவியாக பிட்ச் இல்லை. பந்துகள் மெதுவாக மட்டைக்கு வந்தன. 5 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 44 பந்துகளில்தான் மெக்கல்லம் அரைசதம் எட்டினார்.

13-வது ஓவரின் போது ரன் விகிதம் 6 ரன்களுக்கு சற்று கூடுதலாக இருந்தது அவ்வளவே. ஆனால் அதன் பிறகு அடுத்த 17 பந்துகளில் 31 ரன்கள் விளாசப்பட்டது.

டு பிளெஸ்ஸிஸ், மெக்கல்லம் ஜோடி சுமார் 12 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 101 ரன்களை சேர்த்தது. மெக்கல்லம் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 129 ரன்களில் இருந்தது. பிறகு தோனி, பிராவோ அடியினால் ஸ்கோர் 157 ரன்களை எட்டியது.

இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ், ஸ்பின் அச்சுறுத்தலை அறிந்திருந்தது. ஆனால் மோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே விக்கெட்டை வீழ்த்த ஜடேஜா உட்புகுந்தார். நடுவரிசை வீரர்களை ஜடேஜா பெவிலியனுக்கு அனுப்ப ராஜஸ்தானால் மீள முடியவில்லை. லாங் ஆன் பவுண்டரியில் பிராவோ, ஷேன் வாட்சனுக்க்குப் பிடித்த கேட்ச் மேட்ச் வின்னிங் கேட்ச் என்றால் அது மிகையல்ல. எல்லைக்கோட்டைத் தாண்டி செல்லும் பந்தை எழும்பி ஒருகையில் பிடித்து அசத்தினார் பிராவோ. அன்று விராட் கோலியை தனது பந்துவீச்சின் போது ரன் அவுட் செய்து திருப்பு முனை ஏற்படுத்தியவர் நேற்று வாட்சன் (28) கேட்சை அருமையாகப் பிடித்தது சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் உத்வேகத்தை அதிகரித்தது.

கடைசி 5 ஓவர்களில் ராயல்ஸ் அணிக்குத் தேவை 65 ரன்கள். சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஆனால் சாம்சனை பிராவோ வீழ்த்தினார். பாக்னர், ரஜத் பாட்டியா ஆகியோரை மோஹித் சர்மா வீழ்த்த கிறிஸ் மாரிஸ் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக முடிந்தார்.

மோஹித் சர்மா 25 ரன்களுக்கு 3 விக்கெட். ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். சூப்பர் கிங்ஸ் சென்னை அணிக்கு 116 போட்டிகள் விளையாடியதில் அஸ்வின் அணியில் இருந்தும் 2-வது முறையாக நேற்று பந்து வீச்சில் ஒரு ஓவர் கூட வழங்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு தனது ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அஸ்வின் பயன்படுத்தப்படவில்லை. நேற்று 2-வது முறையாக அவர் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x