

இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹால்ஸ் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜில் டாட்வெஸ்ட் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்ஹாம்ஷிர் அணிக்காக விளையாடி வரும் அலெக்ஸ் ஹால்ஸ், பெர்மிங்ஹாம் பியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த 6 சிக்ஸர் சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் 43 பந்துகளில் 86 ரன்கள் எடுத்த ஹால்ஸ், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஹால்ஸ் இணைந்துள்ளார். இதற்கு முன்பு சர் கார்பில்ட் சோப்பர்ஸ், ரவி சாஸ்திரி, ஹர்செல் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.
26 வயதாகும் ஹால்ஸ், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை. ஆனால் இப்போது மும்பை அணியில் வாங்கப்பட்டுள்ளார். இறுதி லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்காக 33 இருபது ஓவர் கிரிக்கெட், 10 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியது இல்லை. எனினும் உள்ளூர் இருபது ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டி வருகிறார். மும்பை இண்டியன்ஸ் அணியில் கோரி ஆண்டர்சனுக்கு பதிலாக ஹால்ஸ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.