Published : 24 May 2014 01:25 PM
Last Updated : 24 May 2014 01:25 PM

அகில இந்திய ஹாக்கி: அஸ்வின் ஹாட்ரிக்; கோவில்பட்டி வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 6-வது அகில இந்திய ஹாக்கி போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கோவில்பட்டி, பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்தப் போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி தலைமை வகித்தார். கோவில்பட்டி சார் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் ஆட்டத்தில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணியும், கேரள ஹாக்கி அணியும் மோதின. இதில் கோவில்பட்டி அணி 8- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. கோவில்பட்டி அணி வீரர் நவீன்குமார் ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 11-வது நிமிடத்தில் கோபியும், 22, 24, 47-வது நிமிடங்களில் அஸ்வினும், 34-வது நிமிடத்தில் வினோத்குமாரும், 56-வது நிமிடத்தில் பிச்சுமணியும், 68-வது நிமிடத்தில் வாசுதேவனும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் பி.சி.டி.சி. அணியும், மதுரை ஜி.கே. மோட்டார்ஸ் அணியும் மோதின. இதில், பெங்களூர் அணி 7- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டிகள் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 30 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x