Last Updated : 21 May, 2015 03:10 PM

 

Published : 21 May 2015 03:10 PM
Last Updated : 21 May 2015 03:10 PM

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்துவது கடினம்: டிவில்லியர்ஸ்

ஐபிஎல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸை எளிதாக வெளியே அனுப்பிய போதிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டி கடினமாக இருக்கும் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

"அது ஒரு கடினமான போட்டியாக அமையும் என்று கருதுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல அணி, சவால் ஏற்படுத்தும் அணி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் அந்த அணியை வீழ்த்துவது கடினமே.

ஆனாலும், ராஞ்சிக்குச் சென்று அவர்களை வீழ்த்துவதை விரும்புகிறோம். அங்கிருந்து இறுதிக்கு முன்னேறி கோப்பையை வென்றால் மேலும் வியக்க வைக்கும். இதற்கான முயற்சிகளை படிப்படியாக மேற்கொள்வோம்” என்றார்.

ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் பற்றி...

நேர்மையாகக் கூற வெண்டுமென்றால் நான் நேற்று நன்றாக ஆடவில்லை. மந்தீப் சிங்குக்குதான் நான் அனைத்து பெருமைகளையும் சேர்ப்பேன். என்னைப் பொறுத்தவரையில் நான் நினைத்த அளவுக்கு அனாயசமாக ஆட முடியவில்லை. நான் சில ஓவர்கள் தடுமாறினேன். போராடி நின்று கடைசியில் அடித்தது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

3-ம் நிலையில் களமிறங்குவதால் எனது இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு நகர்த்த முடிகிறது. நேற்றைய பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது அல்ல. என்னால் இஷ்டப்படி ஷாட்களை ஆட முடியவில்லை. தொடக்கத்திலேயே ஸ்லாக் செய்ய நினைத்தேன் ஆனால் முடியவில்லை.

இதனால்தான் மந்தீப் சிங் இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன், அவர் எனது சுமையை சற்றே இறக்கினார்” என்ற டிவில்லியர்ஸ் இளம் வீரர்களுக்கு அணியில் உதவிகரமாக இருப்பது பற்றி கூறும் போது,

“மற்றவர்களிடத்தில் நல்ல விதத்தில் தாக்கம் ஏற்படுத்துவதைத் தவிர வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது. நான் நேர்மறையான செல்வாக்கு செலுத்துகிறேன். மந்தீப், என்னால் தாக்கம் பெற்றேன் என்று கூறினால் அது என்னை ஒரு மகிழ்ச்சியான மனிதனாக்குகிறது. நான் எனது குறிக்கோளை எட்டியதான உணர்வை என்னுள் இது ஏற்படுத்துகிறது.

மந்தீப் சிங்கிடம் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவெனில் அவர் மிகவும் நிதானமாக செயல்படுகிறார், நெருக்கடியிலும் நல்ல முடிவுகளை எடுக்கிறார் என்பதே”

இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x