யூனிஸ் கான், அசார் அலி சதம்; ரன் குவிப்பில் பாகிஸ்தான்

யூனிஸ் கான், அசார் அலி சதம்; ரன் குவிப்பில் பாகிஸ்தான்
Updated on
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்துள்ளது.

மிர்பூரில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் அசார் அலி 127 ரன்களுடனும், மிஸ்பா உல் ஹக் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளின் ரன் மழையில் டிரா ஆக, இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

கடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட மொகமது ஹபீஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது ஓவரில் மொகமது ஷாகித் வீசிய பந்து ஒன்று உள்ளே வந்து அதன் பிறகு லேட் ஸ்விங் ஆகி வெளியே செல்லும் பாதையில் ஹபீஸ் மட்டையின் விளிம்பைத் தொட்டுச் செல்ல முஷ்பிகுர் கேட்ச் பிடித்தார். கால்களை நகர்த்தாமல் ஆடினார் ஹபீஸ், ஆனால் இது ஒரு அருமையான பந்து என்பதை மறுப்பதற்கில்லை.

9/1 என்ற நிலையிலிருந்து சமி அஸ்லம், அசார் அலி இணைந்து ஸ்கோரை 58 ரன்களுக்கு உயர்த்தினர். சமி அஸ்லம் 19 ரன்கள் எடுத்து அப்போது தைஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

யூனிஸ் கான், அசார் அலி இரட்டைச் சதக் கூட்டனி:

58/2 என்று ஜோடி சேர்ந்த அசார் அலி, யூனிஸ் கான், 250 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இருவருமே முன்னதாகவே ஆட்டமிழக்க வேண்டிய நிலைதான்

ஏற்பட்டது. மொகமது ஷாகித் பந்தை 3-வது ஸ்லிப்பிற்கு எட்ஜ் செய்த அசார் அலி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட பிழைத்தார். அப்போது 18 ரன்களிலிருந்த அசார் அலி, பிறகு 34 மற்றும் 35 ரன்களில் இரு கேட்ச் வாய்ப்புகள் கொடுத்தார். ஆனால் வங்கதேச பீல்டர்கள் பிடிக்கவில்லை.

உணவு இடைவேளைக்கு முன்பாக 15 பந்துகளில் 1 ரன் எடுத்து தடுமாறிய யூனிஸ் கான், அதன் பிறகு வெளுத்துக் கட்ட தொடங்கினார். முன்காலை இடது புறமாகப் பரப்பிக் கொண்டு ஸ்பின்னரக்ளை தூக்கி அடிக்கத் தொடங்கினார். ஸ்வீப் ஷாட், பேக்ஃபுட் ஷாட் என்று யூனிஸ் கான் அசத்தியதோடு இவரும் அசார் அலியும் நிறைய சிங்கிள்களை எடுத்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு யூனிஸ் கான் முதலில் சதத்தை எட்டினார். 142 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் சதம் எட்டினார். அசார் அலி 212 பந்துகளில் சதம் எட்டினார்.

ஸ்கோர் 308 ரன்களை எட்டிய போது, 195 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 148 ரன்கள் எடுத்த யூனிஸ் கான் சுவாகத ஹோம் கேட்ச் பிடிக்க மொகமது ஷாகித்திடம் வீழ்ந்தார். கட் ஷாட் ஆட முயன்று கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் தவிர மீதி அனைவரும் பந்து வீச்சை முயன்று பார்த்த வியர்த்தமான முதல் தின ஆட்டமாக வங்கதேசத்துக்கு அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in