Published : 17 May 2014 07:17 PM
Last Updated : 17 May 2014 07:17 PM

வெற்றிக்கட்டாயத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும் பெங்களூரு

ராஞ்சியில் நாளை நடைபெறும் ஐபிஎல். போட்டியில் பிளே ஆஃபிற்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்ட பலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டிய சூழலில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு சந்திக்கிறது.

கடைசி 4 அணிகள் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறாமல் வெளியேற வேண்டுமென்றால் மீதமுள்ள 4 போட்டிகளிலும் அது தோற்றாக வேண்டும். அப்படியே தோற்றாலும் நிகர ரன் விகித அடிப்படையில் அந்த அணி தகுதி பெற்று விடும்.

சென்னை, கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃபின் முதல் 3 இடங்களை பிடித்துவிட்டது என்றே கூறலாம். 4வது இடத்திற்கான கடும் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கட்டா நைட் ரைடர்ஸ், மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

கடந்த 2 போட்டிகளில் யுவ்ராஜ் சிங் செமத்தியான பார்மைக் காண்பித்தார். அவரது ஆட்டம் இதேபோல் தொடர்ந்தால், கோலியும் பங்களிப்பு செய்து விட்டால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி கவனிக்கவேண்டிய பகுதி அதன் பந்து வீச்சாக மட்டுமே இருக்கும், இப்போதைக்கு சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அருமையாக வீசி வருகிறார். 10 போட்டிகளில் அவர் 12 விக்கெட்டுகளை ஓவருக்கு 6.48 என்ற சிக்கன விகிதத்தில் எடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மோகித் சர்மா, ஈஸ்வர் பாண்டே சிறப்பாக வீசி வருகின்றனர். ஜடேஜா, அஸ்வின் எப்போதுமே மேட்ச் வின்னர்கள், தற்போது டேவிட் ஹஸியும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு மிகவும் நெருக்கடியான நிலையில் கடினமான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எது எப்படியிருந்தாலும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறை இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x