

நான் சிறப்பாக விளையாடுவதற்கும், சிறந்த வீரராக உருவானதற்கும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங்கே காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற டெல்லி டேர் டெவில்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி 79 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித்தந்த பிறகு ஸ்மித் கூறியதாவது:
நான் சிறப்பாக ஆடுவதற்கு முழுக்காரணமும் ராபின் சிங்தான். அவருடன் இணைந்து அதிக அளவில் பயிற்சி பெற்றேன். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். துரதிருஷ்ட வசமாக அவர் எங்களுடைய சென்னை அணியில் இல்லை. நான் நல்ல பேட்ஸ்மேனாக உருவெடுப்பதற்காக அவர் நிறைய விஷயங் களைக் கற்றுக்கொடுத்தார். நான் இப்போது சிறப்பாக ஆடுவதற்கு அவர்தான் காரணம்.
அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய ஆட்டத்தை எனது கட்டுப்பாட்டுக்குள் எப்படி வைப்பது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வேறு எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அதில் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை பெறுவதற்கு அதிக அளவில் ரன் குவிக்க வேண்டும். சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்தால் மட்டும் போதாது.
ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுத்தால்தான் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும் என்பதைக் கற்றுத்தந்தார். இதுதவிர நான் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என் பதைக் வெளிக்காட்ட ஐபிஎல் போட்டிதான் வாய்ப்பு தந்தது” என்றார்.