Last Updated : 08 May, 2014 12:49 PM

 

Published : 08 May 2014 12:49 PM
Last Updated : 08 May 2014 12:49 PM

கார்த்திக் அபாரம்; ஐசிஎப் 4-வது வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது. ஐசிஎப் ‘லெப்ட் விங்கர்’ கார்த்திக் இரு கோல்கள் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஐசிஎப் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் ரயில்வே அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

சென்னை நேரு மைதானத்தில் புதன் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஐசிஎப் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐசிஎப் அணியின் ‘லெப்ட் விங்கர்’ கார்த்திக், ரயில்வே கோல் கீப்பர் ஜசிர் முகமதுவை பின்னுக்குத்தள்ளிவிட்டு பந்தை கோல் கம்பத்துக்கு அடித்தார். ஆனால் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்ட பந்து வெளியில் செல்ல, மயிரிழையில் கோல் வாய்ப்பு நழுவியது.

அதேநேரத்தில் ரயில்வே அணியின் ஸ்டிரைக்கர் ரிஜு, ரெட் கார்டு பெற்ற தன் காரணமாக இந்த ஆட்டத்தில் விளை யாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த அணியின் ஸ்டிரைக்கர்கள் இள முருகன், சிராஜுதீன் ஆகியோர் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்றா லும் கோலடிக்க முடியவில்லை. சிராஜுதீனின் அதிவேக ஷாட்டையும் மிகத்துல்லியமாகத் தகர்த்தார் ஐசிஎப் கோல் கீப்பர் சதீஷ் குமார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய கார்த்திக், இடதுபுறத்தில் இருந்து பந்தை அற்புதமாக ‘கிராஸ்’ செய்தார். அது கோலாகும் என்று எதிர்பார்த்தபோது, ஐசிஎப் ஸ்டிரைக்கர் பிரெடியின் கையில் பந்துபட்டதால் அந்த வாய்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. கோலடிப்பதில் தொடர்ந்து தீவிரம் காட்டிய ஐசிஎப் அணிக்கு 41-வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. வலது புறத்தில் இருந்து வலது பின்கள வீரர் பார்த்திபன், 18 யார்ட் தூரத்தில் இருந்த கார்த்திற்கு பந்தை ‘பாஸ்’ செய்தார். அதை மிக அழகாக மார்பில் வாங்கி தடுத்த கார்த்திக், கீழே விழுந்த பந்து மீண்டும் மேலெழுந்தபோது அதிவேகமாக கோலடித்தார்.

அடுத்த 4-வது நிமிடத்தில் ஐசிஎப் அணியின் பிரெடி 2-வது கோலை அடித்தார். மிட்பீல்டில் இருந்து பின்கள வீரர் சூர்யா ‘பாஸ்’ செய்த பந்து பிரெடியிடம் செல்ல அவர் மிக எளிதாக கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஐசிஎப்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஐசிஎப் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு சில கோல் வாய்ப்புகளை நழுவவிட்ட ஐசிஎப் அணிக்கு 82-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தார் கார்த்திக். இதன்பிறகு ரயில்வே அணியின் ஒரு சில கோல் வாய்ப்புகளை மிக அற்புதமாக ஐசிஎப் கோல் கீப்பர் முறியடிக்க, ஐசிஎப் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இரு கோல்களை அடித்த கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்-ஸ்போர்ட்டிங் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இன்றைய ஆட்டங்கள்

முதல் டிவிசன்

மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட் - சென்னை எப்.சி. நேரம்: பிற்பகல் 2.15

சீனியர் டிவிசன்

தமிழ்நாடு போலீஸ் - ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் நேரம்: மாலை 4.15

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x