

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார்.
இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த திராவிட், “திறமையும், அதற்கான துணிவும் இருந்தால், பிரெண்டன் மெக்கல்லம், மற்றும் டிவில்லியர்ஸ் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்வார்கள்.
ஆனால், இந்த ஷாட்களை ஆடும் முயற்சியில் காயமடைந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
இளம் வீரர்கள் நிச்சயம் அத்தகைய ஷாட்களை ஆட பயிற்சி செய்யவே செய்வார்கள். ஆட்டம் வளர்ந்து கொண்டே செல்கிறது, மூத்த வீர்ர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாகவே உள்ளனர்.
விவ் ரிச்சர்ட்ஸ், சனத் ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, ஆகியோர் பேட்டிங்கின் போக்கையே மாற்றியவர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட இப்போதெல்லாம் நிறைய ஷாட்கள் ஆடப்படுகின்றன.
ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மென், விரேந்திர சேவாக் அத்தகைய அணுகுமுறையை இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடிக் காட்டியுள்ளார். சேவாக் ஒரு விதிவிலக்கான டெஸ்ட் பேட்ஸ்மென், அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
மிகப்பெரிய வீரர்கள் எப்போதும் ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்பவர்கள்”
என்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் திராவிட் கூறினார்.