

வரும் ஜூன் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வரும் 20-ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்படுகிறது.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்வதற்காக மும்பையில் உள்ள கிரிக்கெட் சென்டரில் கூடுகிறது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜூன் 10 முதல் 14 வரை ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவையனைத்தும் மிர்பூரில் நடக்கின்றன.
வங்கதேசத்தில் ஜூன் மாதம் மழைக்காலம் என்பதால் 3 ஒருநாள் போட்டிகளுக்கும் கூடுதல் நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் நடத்தப்படும்.
எம்.எஸ்.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், வங்கதேசத் துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலர் தங்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தங்களை சேர்க்க வேண்டாம் என பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.