

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் வரும் ஜூன் 20 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக்கின் அரையிறுதியில் சர்தார் சிங் தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி.
உலக ஹாக்கி லீக் அரையிறு தியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை ஏ, பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி, பிரான்ஸ், போலந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் சீனா, அயர்லாந்து, மலேசியா, பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
18 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்கும் சர்தார் சிங், 216 சர்வதேச போட்டிகளில் விளை யாடிய அனுபவம் பெற்றவர். கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 20-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கிறது இந்தியா.
இந்திய அணியை அறிவித்த பிறகு பேசிய தலைமைப் பயிற்சியாளர் பால் வான் அஸ், “சமீபத்தில் முடிந்த ஜப்பானுக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது. உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் தலைசிறந்த அணிகளுடன் விளை யாடவிருப்பதால் அதற்காக இந்திய வீரர்கள் பல்வேறு உத்திகளை வகுத்து வருகின்றனர். ஹாக்கி லீக் அரையிறுதியில் வலுவான அணிகள் பிரிவில் இடம் பெற்றிருந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலி யாவை மீண்டும் சந்திப்பதை இந்திய வீரர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றார்.
அணி விவரம்:
கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங். பின்களம்: மன்பிரீத் சிங், பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், ரகுநாத், ஜேஸ்ஜித் சிங் குலார், குருமெயில் சிங்.
நடுகளம்: குர்பஜ் சிங், தரம்வீர் சிங், சர்தார் சிங், சிங்லென்சனா சிங், லலித் உபாத்யாய்.
முன்களம்: எஸ்.வி.சுனில், நிகின் திம்மையா, யுவராஜ் வால்மீகி, ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங்.