

இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்த இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும்.
இது குறித்து பிசிசிஐ தலைவர் டால்மியா முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரியர் கான் தெரிவிக்கும் போது, “2014-ம் ஆண்டு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பகுதியாக இருதரப்பு தொடருக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் தொடர் மூலம் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் திட்டமிட்டபடி தொடர் நடைபெறும். தயாரிப்புகள் முழுவேகத்துடன் நடைபெற்று வருகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு நன்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி 8 ஆண்டுகளில் 5 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. டால்மியாவுடனான எனது உறவு நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்று, 2004-ம் ஆண்டு தொடரை நாங்கள் திட்டமிட்டபடி நடத்தினோம், இப்போது நடைபெறவிருக்கும் தொடரும் அவரது முயற்சிகளினால் உருவானதே.
இந்த கிரிக்கெட் தொடருக்கான உள்துறை அமைச்சக மற்றும் அரசின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்” என்றார்.