Published : 09 May 2014 10:00 AM
Last Updated : 09 May 2014 10:00 AM

சச்சின், சேவாக்குடன் மேக்ஸ்வெல்லை ஒப்பிட்ட தோனி

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், வீரேந்திர சேவாக் ஆகியோரைப் போன்று ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்லும் அபாரமான திறமை படைத்தவர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டக்கில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் 38 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. ஆனால் பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதன்பிறகு மேக்ஸ்வெல்லின் அதிரடி குறித்தும், அவர் ரிவர்ஸ் ஹிட்டில் 3 சிக்ஸர் உள்பட 8 சிக்ஸர் அடித்தது குறித்தும் தோனியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மேக்ஸ்வெல் மிக அற்புதமாக ஆடினார். அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசுவதற்கு மிகப்பெரிய திறமை வேண்டும்.

சச்சின், சேவாக்கை போன்று மேக்ஸ்வெல்லும் வித்தியாசமான மற்றும் அபரிமிதமான திறமை படைத்தவர். அதேநேரத்தில் 10 ஓவர்களுக்குப் பிறகு எங்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிவிட்டனர். அதுதான் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது.

பேட்டிங்கில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் டுவைன் ஸ்மித் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்டார். எங்களின் கடைசி பகடைக்காயான ஜடேஜா ஆட்டமிழந்தபோதே, நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். அப்போதே 20 ஓவர்கள் ஆடிவிட்டு வரவேண்டியதுதான் என முடிவெடுத்துவிட்டோம். இதுபோன்ற போட்டிகள் மிக முக்கியமானவை என்றார்.

போட்டி நடைபெற்ற பாரபட்டி மைதானம் குறித்து தோனியிடம் கேட்டபோது, “நல்ல மைதானம், கொஞ்சம் பவுன்சரானது. ஆனால் 2-வது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது” என்றார்.

சென்னையை வென்றது திருப்தியளிக்கிறது: பெய்லி

பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “பலம் வாய்ந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸை இந்த ஐபிஎல் போட்டியில் இருமுறை வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது” என்றார். மேக்ஸ்வெல்லின் அதிரடி குறித்து பெய்லியிடம் கேட்டபோது, “அதைப் பற்றி என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. அவருடை ஆட்டம் மிகப்பிரம்மாண்டமான விளாசல்” என்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற மேக்ஸ்வெல் கூறுகையில், “எனது சிறந்த பார்ம் இந்த போட்டியிலும் தொடரும் என்று நம்பினேன். அது நடந்தது. ஆடுகளம் நன்றாக இருந்தது. பந்துகள் பேட்டுக்கு மிக இலகுவாக வந்தன சுழற்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்த நினைத்தார்கள். ஆனாலும் அவர்களை ஆதிக்கம் செலுத்தவிடவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x