

விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
அவர் இளம் வீரர். 26 வயதுதான் ஆகிறது. எனவே கற்று கொள்ள நிறைய இருக்கிறது, அதிகமாக கற்றுக் கொள்ளும் போது மேலும் சிறப்பாகச் செயல்படுவார் என்றே நான் கருதுகிறேன். அனைத்தையும் விடுத்துப் பார்த்தால் அவர் ஒரு அருமையான வீரர் என்பதே முக்கியம்.
அவர் இப்போது விளையாடும் அதே ஆக்ரோஷ பாணியில் தொடர்வார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு வீரரும் வெவ்வேறானவர்கள், அதன்படியே ஒருவரை எடைபோட வேண்டும். அவர் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பதை மட்டுமே நான் பார்க்கிறேன், மற்றவை பற்றி அல்ல. ஒரு நாள் அவர் நிச்சயம் இந்திய அணியை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.” என்றார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு குறித்த கேள்விக்கு, “அது பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை. அந்தப் பணி கிடைத்தால் செய்ய வேண்டும் அவ்வளவே. இப்போதைக்கு அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு பற்றி, “கடந்த காலத்தில் அவர் எப்படி சீராக ரன்கள் எடுத்தாரோ அதே போல் எடுக்க வேண்டும். மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக அவர் அன்று ஆடியது போல் இன்னும் நிறைய இன்னிங்ஸ்களை ஆடவேண்டியத் தேவை இருக்கிறது. அவர் மீண்டும் பழைய பேட்டிங்குக்குத் திரும்புவார் என்றே நான் நம்புகிறேன்” என்றார்.