Published : 12 May 2015 07:35 PM
Last Updated : 12 May 2015 07:35 PM

கெவின் பீட்டர்சன் மீது நம்பிக்கை இல்லை: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்

இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய இயக்குநரும் முன்னாள் கேப்டனுமான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், கெவின் பீட்டர்சன் விவகாரத்தில் அவர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்கு அவர் கூறும் போது, “நான் முதலில் ஒன்றைக் கூறி விடுகிறேன், அவரது திறமைகள் குறித்து எனக்கு எந்தவிதாமன சந்தேகமும் இல்லை. அவரது சாதனைகள் பேசும் அவரும் அது குறித்து பெருமையுடன் இருக்கலாம். ஆனால் மாதக்கணக்கில் வருடக் கணக்கில் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. எனக்கும் அவருக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒரு பெரிய விஷயம் உள்ளது. இதனால், குறுகிய கால பலன்களுக்காக அவரை அணியில் சேர்ப்பது கடினம் என்று முடிவுக்கு வந்தோம்.

அவர் அணியிலிருந்து தடை செய்யப்பட்டவர் அல்ல. அவரது திறமைகள் பற்றியது அல்ல இது. நம்பிக்கை தொடர்பான இந்த விவகாரத்தை சில நாட்களில் மீண்டும் மறுகட்டுமானம் செய்யவியலாது. எந்த ஒரு அமைப்பிலும் நம்பிக்கை என்பது மிக முக்கியமானது. நம்பிக்கை இல்லை என்ற உண்மையிலிருந்து நாம் ஓடி ஒளிந்து விட முடியாது.

நடப்பு கோடைகால தொடருக்கு எங்களது திட்டத்தில் பீட்டர்சன் இல்லை. அவருக்கோ, மற்ற வீரர்களுக்கோ, இந்த சீசன் முடிந்தவுடன் உத்தரவாதம் எதையும் நான் இப்போதைக்கு கூறுவது சரியாகாது.

இப்போதைக்கு நானும், பீட்டர்சனும் அன்னியமாகிவிட்டோம், இது பீட்டர்சன் பற்றிய பிரச்சினையல்ல, இங்கிலாந்து கிரிக்கெட் பற்றிய விவகாரம்” என்றார் ஸ்ட்ராஸ்.

ஓவலில் நடைபெற்று வரும் போட்டியில் லீசெஸ்டர் அணிக்கு எதிராக கெவின் பீட்டர்சன் 355 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் இந்த முடிவினால் பீட்டர்சன் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார். அவரிடம் பியர்ஸ் மோர்கன் பேசிய போது, தன் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது உள்நாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் நிரூபித்தால் இங்கிலாந்து அணியில் இடம்பெறலாம் என்று கூறி தன்னை தவறான நம்பிக்கைக்கு இட்டுச் சென்றனர் என்றும், இதனால் மிகப்பெரிய பண நஷ்டத்தை ஏற்படுத்தும் முடிவை தான் எடுத்துவிட்டதாகவும், இதனால் பீட்டர்சன் மிகுந்த வெறுப்பும், கோபமும் அடைந்துள்ளார் என்றும் அவர் இதற்கு எப்படி பதிலடி கொடுப்பார் என்பதும் தெரியவில்லை என்றும் பியர்ஸ் மோர்கன் தெரிவித்தார்.

நம்பிக்கை ஏற்படுத்தும் பாலமாக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், பீட்டர்சனுக்கு இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் ஆலோசகராக பொறுப்பேற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இது ஒரு தொடக்கம், இதில் உறவுகள் நம்பகத் தன்மை பெற்றால் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும், ஆனால் பீட்டர்சன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் இதனை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்தார்.

பலரும் ஸ்ட்ராஸின் இந்த முடிவை ட்விட்டரில் விளாசி வருகின்றனர். அதாவது சிறுமைத்தனமும், முதிர்ச்சியின்மையும் என்று ஸ்ட்ராஸை விளாசி எடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தனத் ட்விட்டரில், “இங்கிலாந்து கிரிக்கெட்டை உலக அரங்கில் பலரும் கைகொட்டி சிரிக்கும் விதமாக மீண்டும் ஒரு முறை பீட்டர்சன் ஆக்கிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x